Breaking News

பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன் கட்டுரை !

 


கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது.மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் உள்ளே கொண்டு வரக்கூடிய ஒரே சிவில் அமைப்பாக தமிழ் சிவில் சமூக அமையும்தான் காணப்படுகிறது.எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த சந்திப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும்,சந்திப்புக்கு அழைக்கப்பட்ட கட்சிகளிலும் சிலர் பங்குபற்ற வில்லை.புளொட் இயக்கத்தின் தலைவரும் டெலோ இயக்கத்தின் தலைவரும் அங்கு வந்திருக்கவில்லை. புளொட் இயக்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை அனுப்பியிருந்தது. சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவும் வந்திருக்கவில்லை. சுமந்திரன் வந்திருந்தார்.மாவை சேனாதிராஜா வந்திருந்தார். விக்னேஸ்வரன் வரவில்லை, அருந்தவபாலனை அனுப்பியிருந்தார்.சுரேஷ் பிரேமசந்திரன்,ஐங்கரன்நேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வந்திருந்தார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை தலைவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தமிழ் பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளை எழுதுபவர்களும் அங்கே வந்திருந்தார்கள்.

மேற்படி சந்திப்பின் நோக்கம் பேச்சுவார்த்தைகளை இலக்காகக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது ஆகும்.

பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்,அக்கட்டமைப்பானது கட்சிகளில் மட்டும் தங்கியிராமல் கட்சிகளுக்கு வெளியே புதுஜீவிகள், கருத்துருவாக்கிகள்,சமூகப் பெரியார்கள், சமயப் பெரியார்கள், செயற்பாட்டாளர்கள் போன்ற பல தரப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.சந்திப்பின் முடிவில் அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சிகளோ அல்லது கட்சி பிரமுகர்களோ தனி ஓட்டம் ஓடுவதை தடுப்பது மேற்படி சந்திப்பின் உள்நோக்கம் ஆகும். தமிழ் மக்கள் ஒரு தரப்பு என்ற அடிப்படையில் ஒரு தேசம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்றும், எனவே ஒரு தேசத்துக்குரிய கட்டுமானம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை திட்டமிடவும் ஒழுங்குபடுத்தவும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.அக்கருத்தை அங்கு கூடியிருந்த பெரும்பாலான அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பதன் பொருள்,தமிழ் தரப்பு இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கிறது என்பது அல்ல.சுமந்திரன் கூறுவது போல ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களையும் வெளிநாடுகளையும் ஏமாற்றுவதற்காக ஒரு பட்டத்தை வானில் விட முயற்சிக்கிறார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் பட்டம் விடுகிறாரோ இல்லையோ தமிழ் மக்கள் அதற்காக அண்ணாந்து பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க தேவையில்லை. ரணில் வருவார் போவார் அவரைப் போல எத்தனையோ தலைவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் வந்து போய்விட்டார்கள்.ஆனால் எல்லாத் தலைவர்களும் தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே அந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் சிங்கள தலைவர்களை எதிர்கொள்ளவும், அவர்கள் விரிக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்து எறியவும், அவற்றை அனைத்துலகத்திற்கு அம்பலப்படுத்தவும் தமிழ் மக்களிடம் ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும்.ஒரு தேசம் என்ற அடிப்படையில் தமிழ்மக்கள் அதற்குரிய கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.சிங்களத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கலாம்,இல்லாமல் விடலாம். ஆனால் தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு தாங்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஒரு கட்டமைப்பை வைத்திருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளும் நிரந்தரமானவர்கள் அல்ல. இன்றைக்கு இருக்கும் மக்கள் பிரதிநிதி நாளை இல்லாமல் போகலாம்.ஆனால் ஒரு தேசமாக தமிழ் மக்கள் தொடர்ந்து இருக்கிறார்கள், இருக்கவும் வேண்டும். எனவே ஒரு தேசம் என்ற அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். அது அரசியல்வாதிகளில் தங்கியிராமல் சுயாதீனமாக இயங்கும் ஒரு கட்டமைப்பாகவும் இருக்க வேண்டும்.இந்த அடிப்படையில் பேச்சு வார்த்தைகளுக்கான ஒரு சுயாதீனக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த 11ஆம் திகதி ராஜா கிரீம்ஹவுஸில் நடந்த சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் ஓர் அரசுடைய தரப்பு அல்ல.ஓர் அரசற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களுக்கு ஐநா போன்ற உலகப் பொது மன்றங்களிலும் உரிய அங்கீகாரம் இல்லை.அது மட்டுமல்ல இந்தியா சீனா அமெரிக்கா போன்ற பேரரசுகளும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் எப்பொழுதும் கையாளப் பார்க்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் அணுகுமுறை அத்தகையதுதான்.

அண்மையில்கூட இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதியான வை.கோபாலசாமி ஒரு கேள்வியை எழுப்பிய பொழுது இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதை காணலாம். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகள் ஒரு இனத்துக்கு என்று வழங்கப்படவில்லை,இலங்கைக்கு பொதுவாகவே வழங்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இலங்கையை இந்தியா கொழும்புக்கு ஊடாகத்தான் அணுகுகின்றது. கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் இந்தியா கையாள முயற்சிக்கும். கொழும்பில் உள்ள அரசாங்கம் இந்தியாவின் வழிக்கு வரவில்லை என்றால்,தமிழ் மக்களை ஒரு கருவியாக பயன்படுத்தி, கொழும்பைப் பணியவைப்பார்கள். அதுதான் இந்திய-இலங்கை உடன்படிக்கை.எனவே ஓர் அரற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களிடம் ஒரு தேசமாக இருப்பதற்கு தேவையான கட்டுமானங்கள் அநேகமாக இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கருநிலை அரசை நிர்வகித்தபொழுது அவர்கள் ஒரு தொகுதி கட்டமைப்புகளை உருவாக்கினார்கள்.ஆனால் 2009க்கு பின் அவ்வாறான கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.

உதாரணமாக வெளிநாடுகளை அணுகுவதற்கு ஒரு வெளியுறவுக் கொள்கை வேண்டும்.வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு ஒரு சிந்தனைக் குழாம் வேண்டும்.வகுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதற்கு நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு வெளியுறவுக் கொமிட்டி வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.கடந்த 13ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் ராஜதந்திரிகளோடும் வெளிநாடுகளோடும் அனைத்துலக நிறுவனங்களோடும் இடையூடாடி வருகின்றன.ஆனால் அவ்வாறான ராஜிய இடையூடாட்டங்களுக்கு பொருத்தமான கட்டமைப்புகள் எவையும் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை.அரங்கில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளும் தனிநபர்களின் ஆங்கிலப் புலமை,ராஜதந்திரப் புலமை என்பவற்றில்தான் தங்கியிருக்கின்றன. ஆனால் வெளியுறவு நடவடிக்கைகள் எனப்படுகின்றவை அதற்கு பொருத்தமான நிபுணர்களைக் கொண்ட கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் கட்சிகளிடம் கிடையாது.அதனால் தான் கட்சிப் பிரமுகர்கள் ராஜதந்திரப்பரப்பில் தனியோட்டம் ஓடுகிறார்கள்.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ராஜா கிரீம் கவுஸ் சந்திப்புக்கூட பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். அதுவே தவறு. பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது என்பது,திடீர் ரசத்தை, அல்லது திடீர் தோசையைப் போன்றது அல்ல. அது தேசநிர்மாணத்தின் ஒரு பகுதி. அப்படி ஒரு கட்டமைப்பு இதுவரையிலும் தமிழ்த் தரப்பில் இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறாரா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை,தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை என்று வரும்பொழுது கொழும்பையும் அனைத்துலக சமூகத்தையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய தயாரிப்புகளோடு இருக்கிறதா இல்லையா என்பதே இங்கு பிரச்சனை. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதற்கு தேவையான வெளியுறவு கட்டமைப்பைத் தமிழ்த் தரப்பு கொண்டிருக்கிறதா இல்லையா என்பதே இங்கு கேள்வி.

இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகளுக்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று கடந்த 11ஆம் திகதி ராஜா க்ரீம் ஹவுஸில் கூடிய கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் உடன்பட்டிருந்தார்கள். பேச்சுவார்த்தைகள் 13ஆம் திகதி ஆரம்பமான பின்,அடுத்தகட்ட நகர்வை முன்னெடுப்பது என்றும் சிந்திக்க பட்டது.பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை மேலும் ஒரு சந்திப்பு இடம்பெறவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த சந்திப்பு சர்ச்சைக்குரியதாக மாறியது. அச்சந்திப்பில் அரச தரப்புடன் சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட  விடயங்களைப்பற்றி பின்னர் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அச்சந்திப்பில் பங்குபற்றவில்லை. விக்னேஸ்வரனின் கட்சியும் கலந்து கொள்ளவில்லை.உரிய முறைப்படி உரிய நேரத்தில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று மேற்படி காட்சிகள் தெரிவித்தன.விக்னேஸ்வரன் அதுதொடர்பாக பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.அது ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல என்று அரசுத் தலைவரின் செயலகம் தெரிவித்துள்ளது.வரும் 5ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒரு சந்திப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தைகள் என்று தொடங்கிய பின் அரசாங்கம் ஒரு கட்சியை மட்டும் அழைத்துச் சந்திப்பது ஒரு நல்ல அறிகுறியல்ல.மேலும் எல்லாக் கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளுக்கென்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானித்துவிட்டு ஒரு கட்சி மட்டும் தனியாகச் சென்று அரசுத் தலைவரை சந்தித்தமையும் நல்ல தொடக்கமல்ல. பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதைத்தான் அது உணர்த்துகின்றது.