Breaking News

சைபீரியாவில் 48 ஆயிரம் ஆண்டு பழமையான 'ஜாம்பி' வைரஸ் கண்டுபிடிப்பு!

 


ஐரோப்பாவை சேர்ந்த விஞ்ஞானிகள் சைபீரியாவில் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரசை கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரசை பனிப்பாறைகளுக்கு கீழே புதைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். ரஷியாவில் சைபீரியா பகுதியில் உள்ள பெர்மா ப்ரோஸ்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பண்டைய மாதிரிகளை ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். 

பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த ஏரியின் அடியில் சுமார் 12 வைரஸ்களை கண்டுபிடித்தனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாக புதைந்திருந்த ஜாம்பி வைரஸ் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த வைரஸ்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்தாலும் அது தற்போதும் மனிதர்களை தாக்கக்கூடிய தன்மையுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, "இந்த ஜாம்பி வைரஸ்கள், பெரும்பாலும் அமீபா நுண்ணுயிர்களை பாதிக்கும் தன்மை கொண்டவை. இவை மனிதர்களை தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு. பனிப்பாறைகள் உருகும்போது இது போன்ற பழமையான வைரஸ்கள் வெளிபட்டாலும் வெளிப்புற சூழலில் எவ்வளவு காலம் தொற்றாக இருக்கும் என்பதும், தனக்கு பொருத்தமான ஒரு உயிர் மீது எப்படி தாக்கும் என்பதையும் மதிப்பிடுவது சாத்தியம் இல்லை. 

புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும் நிலையில் ஆர்க்டிக் பகுதியில் அதிக மக்கள் குடியேறுவதும், ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினர்.