ஜனாதிபதி விசேட அறிவிப்பு!
பராபவ சூத்திரம் தர்மத்தையே அன்றி, தேரர் சங்கம் குறித்து போதிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று (29) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேரர் சங்கத்தின் தர்மத்தின்படி நடந்துகொள்ளாவிடின், பிரச்சினைகள் ஏற்படும் என்றும் இந்த நிலை, கௌதம புத்தரின் காலத்தில் இருந்து தொடர்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேரர் சங்கத்தினரின் ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க மகா சங்கத்தினருக்கு அதிகாரம் வழங்கப்படுவது குறித்த கருத்தாடலை ஏற்படுத்தும் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
‘’உண்மையில் இன்று சமய விவகார, பௌத்த சாசன விவகாரம் குறித்து பேசப்படும் சந்தர்ப்பத்தில் எனக்கு பராபவ சூத்திரத்தைக் கற்பித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் அறிந்த வகையில், பராபவ சூத்திரத்தில், தேரர் சங்கங்கள் குறித்து குறிப்பிடவில்லை. பௌத்தத்தில் முழுமையாக தர்மமே போதிக்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சங்கத்தையும், தர்மத்தையும் குழப்பிக்கொண்டுள்ளார்.
இதனை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். மதகுருமார், சாதாரண மனிதர் என அனைவரும் தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். தேரர்களும், சாதாரண மனிதர்களும் தர்மத்தைப் பின்பற்றாமலும் இருக்க முடியும். ஆனால், அனைவரும் தர்மத்துடன் வாழ வேண்டும். இங்கு தர்மம் குறித்தும் தேரர் சங்கம் குறித்தும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நான் அதிகமாகப் பேசப்போவதில்லை. ஒன்றை மட்டும் நான் அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உண்மையில், தேரர் சங்கத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனாலும் தேரர்களும், சாதாரண மனிதர்களும் தர்மத்தின்படி செயற்பட வேண்டும்.
தேரர்கள் தர்மத்தின்படி நடந்துகொள்ளவில்லையெனில், ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும். கௌதம புத்தரின் காலத்தில் இருந்து இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. தேவதந்த, காவியுடனேயே புத்தருக்கு எதிராக செயல்பட்டார். எனவே, தேரர் சங்கம் குறித்து விழிப்புடன் செயல்பட வேண்டும். எனவேதான் முதல்முறையாக அவர்களுக்கு அதிகாரம் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
தேரர் சங்கத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காக மகா சங்கத்தினருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான கருத்தாடலைப் பதிவு செய்வதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளோம். சட்ட மறுசீரமைப்புத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்த பின்னர், இந்தச் சபையில் அதனை சமர்ப்பிப்போம். காரணம், ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். வரலாற்றில் அதனை மன்னர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
மன்னர்களே தேரர் சங்கத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டனர். பராக்கிரமபாகு மன்னர் காலத்தில் சில தேரர் சங்க உறுப்பினர்களுக்கு மரண தண்டனையையும் விதித்திருந்தார். ஆனால் எங்களால் அப்படிச் செய்ய முடியாது. நாம் அதைச் செய்யப் போவதும் இல்லை. எங்களுக்கு அதற்கு அதிகாரமும் இல்லை. 9ஆவது சரத்திற்கமைய இந்த ஒழுக்க விதிகளையும், கட்டுப்பாடுகளையும் தேரர் சங்கத்தினர் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதற்கான அதிகாரங்கள், சியம் நிக்காய, அமரபுர நிக்காய, ராமஞ்ச நிக்காய ஆகிய தேரர் சங்கங்களுக்கு வழங்கப்படும். காரணம், எங்களுக்கு பல பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. இந்த சட்டமூலங்கள் அவசியமானவை. விசேடமாக பல்கலைக்கழத்தில் உள்ள தேரர்கள் குறித்தே கவனம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழகத்தில் இருக்கும் தேரர் ஒருவர் மல்வத்து அல்லது அஸ்கிரிய பீடாதிபதியை குறைகூறுகிறார், விமர்சிக்கிறார். யார் இவர்கள் என்ற கேள்வி எங்களுக்கு ஏற்படுகிறது.
இவர்கள் தேரர்களா, அல்லது போலிக் காவிகளா என்று கேட்க நேரிடுகிறது. காவியை அணிந்துகொண்டு தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு, விசேட பாதுகாப்பை அவர்கள் பெறமுடியாது. எனவே, இந்த சட்டமூலம் அவசியமானது. இந்த விடயங்கள் குறித்து ஆழமாக பேச வேண்டியிருக்கிறது. உண்மையைப் பேசுவோம். ஏராளமானோர் தேரர்களாக பல்கலைக்கழகத்திற்குள் வருகின்றனர். பல்கலைக்கழக நிறைவின்போது அவர்கள் தேரர்களாக வெளியேறுவதில்லை. ஒரே தீர்மானத்தில் இருக்க வேண்டும். துறவறத்தில் வந்தால் துறவறத்தில் நீடிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பட்டமும் அதற்கமையவே வழங்கப்படும். அதில் திருத்தம் செய்யமுடியாது. இவற்றை மாநாயக்க தேரர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன், பல்கலைக்கழத்திற்குள் நடந்துகொள்ளும் விதத்தையும் இந்த தலைப்புக்குள் உள்ளடக்க வேண்டும். அதன்பின்னர் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியும். அவ்வாறு இல்லாது, தற்போதுள்ள நடைமுறை நீடித்தால், பௌத்த சாசனம் இல்லாமல் போகும். அதனால்தான் இதுகுறித்து நான் பேசினேன். இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். இந்துக்கள் மட்டுமன்றி பௌத்த விகாரைகளிலும் இந்துமதத்தின் பல தெய்வங்களை வழிபடுகின்றார்கள். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது. தெற்கில் விஸ்ணு கடவுளை வழிபடுகின்றனர். ஏராளமான இந்து தெய்வங்களை தெற்கில் வழிபடுகின்றனர்.
விஸ்ணு, கந்தன், பத்தினி உள்ளிட்ட பல தெய்வங்களை வழிபடுகின்றனர். இந்தியாவில் உள்ள இந்து மதத்தைவிட இலங்கையில் உள்ள இந்து மதத்தின் தனித்துவம் குறித்து ஒரு அறிக்கையை தொகுக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன். ஏனைய கட்சிகள் இதற்கு உதவ முடியும். வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தையும் நீங்கள் காணலாம். இது நாம் செய்ய வேண்டிய ஒன்று. அதேபோல், இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
நாம் வரலாற்றை மறந்துவிடுகிறோம். எனவே, வரலாறு குறித்த அறிவையும், ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மகா வம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகா வம்சத்திலும் ஒரு தரப்பினரின் கருத்துக்களே இருக்கின்றன. வெளியே வேறு கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மட்டும், மூன்று மருத்துவபீடங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். ஊவவெல்லஸ்ஸ, குருணாகல், பொலன்னறுவை ஆகிய இடங்களில் இவற்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். அங்குள்ள இரண்டு ஆதார வைத்தியசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். மூன்று பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டபின்படிப்பு வழங்கப்படவுள்ளது. கொழும்பில் ஒன்று இருக்கிறது. இதற்கு மேலதிகமாக மூன்று பீடங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதன்மூலம் மற்றுமொரு மைல்கல்லை நாம் அடையவுள்ளோம்.
மருத்துவ பரிசோதனை நிறுவனத்தை மேம்படுத்த மேலும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளைப் பெற்றுத் தருகிறோம். புனே நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் கொழும்பில் உள்ள மருத்துவப் பரிசோதனை நிறுவனம் திகழ வேண்டும். அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் இந்த இலக்கில் பயணிக்க வேண்டும். மருத்துவ விஞ்ஞானத்தை நாம் மேம்படுத்துவோம். மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் ஒருவருக்கு சுமார் 60 லட்சம் ரூபா வரை செலவிடுகிறோம். இலங்கையில் இருப்பதற்காகவே இவ்வளவு செலவிடுகிறோம்.
ஆனால் அவர்கள் வெளிநாடு செல்கின்றனர். இது மிகப்பெரிய பிரச்சினை. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. எனவே, இதற்கு என்ன செய்வது என்று பாராளுமன்றத்தில் ஒன்றுகூடி தீர்மானிக்க வேண்டும். நாம் பயிற்றுவிக்கும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அந்த நாடுகளில் இருந்து எமக்குக் கிடைக்கும் உதவிகளை விட, நாம் மருத்துவர்களை பயிற்றுவித்து அனுப்பி, அதனைவிட அதிகமான உதவிகளை அவர்களுக்கு நாம் செய்கிறோம்.
அனுபவம் வாய்ந்தவர்களையும் நாம் அனுப்புகிறோம். எமது பல்கலைக்கழங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு நாம் அவர்களை விநியோகிக்கிறோம். பொறியியல் மற்றும் மருத்துவப் பீட மாணவர்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் நிதி வழங்கிறோம். அவர்கள் வெளிநாடு செல்கின்றனர். இதற்கு பொருத்தமான தீர்வைத் தேட வேண்டும். இதுகுறித்து கவனம் செலுத்துகிறேன்." என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.