இலங்கை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பில் முக்கிய இருதரப்புக் கடனாளியான சீனா அக்கறை காட்டாததன் காரணமாக டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கு இலங்கையால் உடன்பாடு எட்ட முடியாது என நிதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு நடந்தால் இலங்கைக்கு கடனைப் பெற அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள ஆய்வாளர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவான நிதி வசதியை 4 வருடங்களுக்காக பெற்றுக் கொள்வதற்காக இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்ததுடன், அதற்கான பணியாளர் உடன்படிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொண்டிருந்தது.
அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், அதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானும் இந்தியாவும் அந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சீனாவில் 20வது கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறுவதால், அது குறித்து விவாதிக்க இலங்கைக்கு போதிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலத்திற்குள் இலங்கைக்கு கடன் வசதியை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.