கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை பேச்சு!
சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கான ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது.
கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதற்கு இலங்கை முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, IMF அனுமதி கிடைத்தவுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு கடன் வழங்குனர்கள் இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
ADB சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, கொள்கைக் கடனொன்றின் மூலம் இலங்கைக்கு கிட்டத்தட்ட 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்குமெனக் குறிப்பிட்டார்.
ஜப்பான் அரசாங்கமும் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு இவ்வாறான கடன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.