தொடரும் ஆசிரியர்களின் அத்துமீறல்!
யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவரொருவர் யாழ்.வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இன்று கல்வி கற்கும் மாணவரொருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த மாணவனை தடிகளால் பல முறை தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் தனது கையால் மாணவனின் நெற்றியில் அடித்துள்ளார்.
இதன்போது சம்பவம் தொடர்பில் கல்லூரியின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும், இது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக ஆசிரியர்களினால் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இது போன்ற மற்றொரு சம்பவம் பாதுக்க பகுதியில் பதிவாகியுள்ளது.
பாதுக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் பௌத்தம் கற்பிக்கும் ஆசிரியர் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் மாணவரை ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, தாக்குதலில் மாணவனின் இடது காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்றையதினம்(18) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.