2500 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் செய்யப்பட்ட பெல்ட் கண்டுபிடிப்பு!
தங்கத்திற்கு அந்த காலத்திலிருந்தே மிகப்பெரிய ஒரு மதிப்பு இருந்து வந்துள்ளது. நெடுங்காலமாகவே தங்கத்தாலான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய மக்கள் அப்பொழுதே தங்கத்தை பயன்படுத்தியதை நமக்கு சொல்கிறது. அப்படி சமீபத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு பெல்ட் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனுடைய வயது ஏறத்தாழ 2500 ஆண்டுகள். செக் குடியரசில் ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் பீட்ரூட் அறுவடை செய்து கொண்டிருந்த பொழுது இந்த அழகான தங்க வேலைப்பாடுகள் கொண்ட தங்க பெல்ட்டை கண்டுபிடித்துள்ளார்.
தங்கத்தாலான இந்த பொருள் வித்தியாசமாக இருக்கவே அவர் ஓபவாவில் அருகிலுள்ள சிலேசியன் அருங்காட்சியகத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த தங்கத்தாலான புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அவர்கள் இதை ஆராய்ந்து இதைப்பற்றி உள்ள தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். இந்த தங்க பெல்ட் 51 சென்டிமீட்டர் நீளமுள்ளது.
இந்த தங்க பெல்ட் கூடவே வெள்ளி, தாமிரம், இரும்பு போன்ற உலோகங்கள் கலந்து தோலால் செய்யப்பட்ட பெல்டின் முன்புறத்தில் சுற்றி வைக்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். இந்த தங்க பெல்டில் அழகான வட்ட வடிவங்களை கலை நுட்பத்தோடு செதுக்கி உள்ளார்கள்.
இந்த பெல்ட் அந்த காலத்தில் சமுதாயத்தில் உயர் பதவியில் இருந்த ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். காரணம் மிகவும் மதிப்புமிக்க தங்கத்தாலான இந்த பொருள்கள் அந்த காலத்தில் அரிதாகவே உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த தங்க பெல்ட் மிகவும் மெல்லியதாக ஒரு காகிதத்தை போல காணப்படுகிறது. அதனால் இது மிக வேகமாக உடையக்கூடிய தன்மையில் இருக்கிறது. இந்த தங்க பெல்ட் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட பிறகு ப்ருண்டால் மியூசியம் பொதுமக்களுக்கு இந்த தங்க பெல்ட்டை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ZIO TAMIL