Breaking News

இரவில் தாமதமாக சாப்பிட்டால்.. ஏற்படும் பாதிப்புக்கள்!

 


உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியமானது. அதுபோலவே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியமானது. நிறைய பேர் 9 மணிக்குள்ளோ, அதற்கு பிறகோ தான் இரவு உணவை சாப்பிடுகிறார்கள். 

10 மணி, 11 மணியை கடந்த பிறகு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். அந்த நிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

 இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். முன்னோர்கள் அத்தகைய வழக்கத்தைத்தான் கடைப்பிடித்தார்கள். அவர்களின் ஆரோக்கியத்திற்கு அதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு நன்றாக ஜீரணமாகாது. இரவு உணவிற்கும், தூங்க செல்லும் நேரத்திற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். 

தாமதமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இரவில் தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது அது தூக்க சுழற்சிக்கும் இடையூறு விளைவிக்கும். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு மேல் தூங்க செல்வது சிறந்தது. அது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். 

காலையில் எழும்போது சோர்வும் தோன்றாது. உடலில் புத்துணர்ச்சி வெளிப்படும். காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடை குறைவதற்கும் உதவும். இரவு 7 மணிக்குள் சாப்பிடும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 

இரவு உணவிற்கும், மறுநாள் காலை உணவிற்கும் இடையே 10 மணி நேர இடைவெளி இருப்பது நல்லது. இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு நேரமில்லாமல் போய்விடும். மேலும் இரவு சாப்பாட்டின் அளவு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். நீரிழிவு, தைராய்டு, இதயம் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும்.