ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் ரிஷி சுனக் கலந்துகொள்ள மாட்டார்!
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் அவசரகால வரவு செலவுத் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ஐநா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ரிஷி சுனக்கின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுவதற்காக முந்தைய அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதியிலிருந்து பிரித்தானியா பின்வாங்காது என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் இந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளாத போதிலும், நாட்டின் அமைச்சர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட சில நாட்களிலேயே மிக முக்கியமான மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்ள மாட்டார் என்ற முடிவு தவறானது என எதிர்க்கட்சிகள், கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ஐநா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி எகிப்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டு புவி வெப்பமாதலை தடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளன. கடந்த ஆண்டு இந்த மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.