நாசாவின் ரொக்கெட் ஏவும் திட்டம் இறுதிநேரத்தில் இரத்து!
நாசாவின் ரொக்கெட் நிலவுக்கு புறப்பட ஆயத்தமான இறுதி நேரத்தில், மூன்றாவது எஞ்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்ணில் ஏவும் திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரித்தானியா உள்ளூர் நேரப்படி பிற்பகல் 13.33 மணிக்கு இந்த ராக்கெட் ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. ஆனால், உத்தேசிக்கப்பட்ட நேரத்தை விட அந்த ரொக்கெட் ஏவும் நேரம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது.
ரொக்கெட்டின் உள்டாங்கியில் திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் டாங்கிகள் இணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டது. அதை சீர்படுத்தும் பணியில் பொறியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அர்டெமிஸ்-1 ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது எஞ்சினில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் நாசா அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.
நாசாவின் மிகவும் சக்திவாய்ந்த ரொக்கெட் ஆக அறியப்படும் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்), ஆளில்லா ஓரியன் விண்கலனை சந்திரனை சுற்றி அனுப்ப உள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், 2025ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தமது லட்சியக் கனவை 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா சாத்தியமாக்கும்.
அதுவும் சந்திரனில் முதல் வீராங்கனையை தரையிறக்க முடியும் என்று நாசா உறுதியாக நம்புகிறது. இந்த விண்வெளி நிகழ்வை தமது இணையதளத்திலும் சமூக ஊடக பக்கங்களிலும் காண நாசா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விண்வெளி பயணத்தில் ஷான் ஆடு (உருவகப்படுத்தப்பட்ட பொம்மை ஆடு) மற்றும் சில ஸ்னூப்பி பொம்மைகளை விண்வெளிக்கு நாசா அனுப்புகிறது.