Breaking News

நினைவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய முயற்சி - அதன் முடிவுகள் ?

நமது மூளையின் சில பகுதிகளை எந்த பாதிப்பும் இன்றி மின்சாரம் மூலம் தூண்டி, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

இதனை தன்னார்வலர்களைக் கொண்டு விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சொற்களை மனப்பாடம் செய்யும் விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டனர். இந்தப் பரிசோதனை அவர்களின் இயல்பான குறுகிய கால நினைவாற்றலையும், நீண்ட கால நினைவாற்றலையும் சோதித்தது.

இந்த ஆய்வின் முடிவுகள் நம் அன்றாட வாழ்வுக்கு எப்படி உதவும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைவதைச் சமாளிக்க உதவுவது, நினைவாற்றல் தொடர்பான நோய்க்கு சிகிச்சையளிப்பது, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது போன்றவற்றுக்கு இது உதவக்கூடும்.

மூளையின் சில பகுதிகளை விலக்கி வைத்து, சில பகுதிகளை மேம்படுத்தும் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்கிறது இந்த மூளையைத் தூண்டும் தொழில்நுட்பம் என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ரெய்ன்ஹார்ட் விவரிக்கிறார். இது முற்றிலும் புதிய சிகிச்சை முறைக்கான புதிய வழியைத் திறக்கிறது என்கிறார் அவர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு மின்முனைகள் (electrodes) பொருத்தப்பட்ட தொப்பியை அணிவித்தனர். பிறகு, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் மூளை அலைகளைத் துல்லியமாக மாற்றும் வகையில் இந்த தொப்பியில் பிறகு கட்டுப்படுத்தப்பட்ட மின்னோட்டம் செலுத்தப்பட்டது. இந்த மின்னோட்டம், ஒரு வித அரிப்பு அல்லது கூச்ச உணர்வை தரக்கூடியது.

இந்த தூண்டுதல் சோதனையில் பங்கேற்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு தினமும் 20 நிமிடங்களுக்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த ஆய்வு முழுவதும் அவர்கள் மனப்பாடம் செய்வதற்கு ஒரு சொற்களின் பட்டியல் தரப்பட்டது. ஒரு மாதம் கழித்து மீண்டும் அவற்றை நினைவுபடுத்தும் படி அவர்களுக்கு கூறப்பட்டது.

இந்த சிகிச்சை குறைந்தது ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் குறிப்பிட்ட நினைவாற்றல் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் டாக்டர் ரெய்ன்ஹார்ட்.

'நேச்சர் நியூரோ சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளில், பரிசோதனையின் தொடக்கத்தில் நினைவாற்றல் விளையாட்டு சோதனையில் ஈடுபட்டவர்கள் தடுமாறினர். ஆனால், அதன்பிறகு அவர்களின் நினைவாற்றல் மிகவும் மேம்பட்டதாக காட்டுகிறது ஆய்வு முடிவு.

நமது நினைவாற்றல் எப்படி செயல்படுகிறது?

மின் சமிக்ஞைகள் நமது மூளையில் சில குறிவைக்கப்பட்ட பகுதிகளின் செயல்பாட்டை, அதாவது, மூளை அலைகளை மாற்றுகிறது

நான்கு சுற்று தூண்டுதல் பரிசோதனையில், இந்த அமைப்பு வலுப்பெற்றது. மூளை இந்த மின் சமிக்ஞைகளுக்கு தன்னை தகவமைத்துக்கொண்டு, நீடித்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது நியூரோபிளாஸ்டிசிட்டி (neuroplasticity) என அறியப்படுகிறது.

"இந்த மின் தூண்டுதல்கள் மூளையின் செயல்பாட்டுடன் தொடர்பு கொள்கிறது," என்று டாக்டர் ரெய்ன்ஹார்ட் கூறினார்.

ஆனால், பல்வேறு நினைவாற்றல் வகைகளை மேம்படுத்த வெவ்வேறு தூண்டுதல் உத்திகள் தேவை.

குறுகிய கால நினைவாற்றல் என்பது உங்கள் மூளையில் தகவலை எப்படித் தக்கவைத்துக்கொள்கிறீர்கள் என்பதற்கு உதவும். அதாவது, வகுப்பில் குறிப்புகளை எடுத்துக்கொள்வது போன்றது என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு சிக்கலைத் தீர்ப்பதிலும், ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதிலும் இது முக்கியமாக செயல்படுகிறது.

அதை அதிகரிக்க மூளையின் முன்பகுதியில் உள்ள ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் பகுதியில் (prefrontal cortex) குறைந்த அதிர்வெண் தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும்.

நீண்ட கால நினைவாற்றல் என்பது நாம் தகவல்களை சேமித்து வைக்கும் இடம். முதல் நாள் பள்ளி செல்லும் நாளையோ அல்லது திருமண நாளையோ நாம் இதன் மூலம்தான் நினைவில் வைத்திருக்கிறோம்.

இந்த நினைவாற்றலை அதிகரிக்க மூளையின் பின்பகுதியில் உள்ள பாரிட்டல் கார்டெக்ஸ் (parietal cortex) பகுதியில், உயர் அதிர்வெண் தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும்

இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு வார்த்தை விளையாட்டுகளில், தொடக்கத்தில் கொடுக்கப்பட்டவற்றை நினைவுபடுத்தும் சோதனையில், நீண்ட கால நினைவாற்றல் எப்படி இருக்கிறது என்பது சோதிக்கப்பட்டது. அதே சமயத்தில், ஒரு மாதத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட வார்த்தை விளையாட்டுகள், குறுகிய கால நினைவாற்றலை சோதித்தது.

இந்த சோதனையில் பங்கேற்ற 150 பேரும் ஆரோக்கியமாக இருந்தனர். அவர்களுக்கு எந்த அறிவாற்றல் குறைபாடும் இல்லை. அவர்கள் 65 முதல் 88 வயதுக்குட்பட்டவர்கள். அதிக மறதி ஏற்படுவது என்பது பெரும்பாலும் வயதின் காரணமாக ஏற்படுவதாகும். ஆனால் இந்த வகையான தூண்டுதல் பரிசோதனை, உண்மையில், வார்த்தை விளையாட்டுகளைத் தாண்டி வயதானவர்களின் மூளைத் திறனுக்கு உதவுமா என்பது சரியாகத் தெரியவில்லை.

அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்கள், மூளை செல்கள் இறந்து, அதனால் பாதிக்கப்பட்ட மூளையால் ஏற்படுகிறது. இது நினைவாற்றல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

அல்சைமர், ஸ்கிசோஃப்ரினியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஞ்சியிருக்கும் மூளை செல்களைத் தூண்டுவதற்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அல்சைமர்ஸ் ரிசர்ச் யுகே அமைப்பின் இயக்குநர் டாக்டர் சூசன் கோல்ஹாஸ் இது குறித்து கூறுகையில், "இந்த மூளையைத் தூண்டும் நுட்பங்கள் டிமென்ஷியா உள்ளவர்களுக்கு உதவக்கூடியதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த கோணத்தில் ஆராய்ச்சி நடந்து வருகிறது." என்கிறார்.

தற்போது, பயன்படுத்தப்படும் இந்த தூண்டுதல் முறையான டிரான்ஸ்கிரானியல் ஆல்டர்நேட்டிங் கரண்ட் தூண்டுதல் (transcranial alternating current stimulation) ஆராய்ச்சி, ஆய்வகங்களில் மட்டுமே சாத்தியமாகும்.

அதனால், இந்த அறிவாற்றல் மேம்பாட்டை தேர்வுகளிலோ அல்லது புதிர்களிலோ பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கையில், அந்த வகையான பயன்பாடு வெகு தொலைவில் உள்ளது என்று விஞ்ஞானி கூறுகின்றனர்.

ஆனால், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் சுடோகு போன்று மனிதர்கள் தங்கள் அறிவை கூர்மையாக வைத்திருக்கப் பயன்படுத்தும் பாரம்பரிய முறைகளுடன் இணைந்து அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர் ஷ்ரே குரோவர் கூறுகிறார்.

"அறிவாற்றல் தொடர்பான எந்த முயற்சியும் எப்போதும் வரவேற்கத்தக்கது. இந்த வகையான அணுகுமுறை ஒருவேளை மனிதர்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயங்களுடன் சேரலாம்," என்கிறார்.

WEBDUNIA TAMIL