கோத்தாவின் வீழ்ச்சி - நிலாந்தன் கட்டுரை!
ஒன்பதாம் திகதிக்கும் ராஜபக்சக்களுக்கும் பொருந்தி வராது போல? நிச்சயமாக இது ஒரு எண் சோதிடப் பதிவு அல்ல. அல்லது எண் சோதிடத்திற்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு பற்றிய பதிவும் அல்ல. கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி மஹிந்த மூட்டிய நெருப்பு அவருடைய ஆதரவாளர்களின் வீடுகளை எரித்தது. அவர் பதவி விலக நேர்ந்தது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு பிரதேச சபை தலைவரும் அடித்தே கொல்லப்பட்டார்கள். இச்சிறிய தீவின் நவீன வரலாற்றில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அப்படி ஒரு ஆபத்து முன்னபொழுதும் வந்ததே இல்லை. மஹிந்த ராஜபக்ஷ தன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை விட்டு ஓடித் தமிழ்ப் பகுதிகளில் ஒரு படைத்தளத்தில் ஒழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின் யூன் மாதம் ஒன்பதாம் திகதி பசில் பதவி விலகினார்.நேற்று அதே ஒன்பதாம் திகதி மஹிந்தவின் தம்பியார் கோத்தாவும் தமையனைப் போல ஓடித்தப்ப வேண்டி வந்தது.
ஒன்பதாம் தேதி ஆர்ப்பாட்டம் என்று அறிவிக்கப்பட்ட பொழுது அரசியல்வாதிகள் உஷாரடைந்து விட்டார்கள். மே ஒன்பதாம் தேதி நடந்தது இந்த ஒன்பதாம் தேதியும் நடக்கக் கூடாது என்று அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். அந்த அடிப்படையில் தான் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து அவர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டார்கள். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. மே மாதம் ஒன்பதாம் தேதி என்ன நடந்ததோ அதன் வளர்ச்சிதான் அடுத்த கட்டமாக ஜூலை 9ம் நடக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்
எனவே ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி விட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றி விட்டார்கள். இந்த இடத்தில் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒரு தோற்றப்பாடு உண்டு.அது என்னவென்றால் படைத்தரப்பு தொடர்ந்தும் ஒரு சாட்சி போல நிற்கிறது என்பது. அப்படியென்றால் படைத்தரப்பு அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? அரசியல்வாதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைக்கும் பொழுது படைத்தரப்பு ஏன் அரசியல்வாதிகளை காப்பாற்றவில்லை? அல்லது அரசியல்வாதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஏன் காப்பாற்றவில்லை?முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வீட்டை ஏன் படையினர் பாதுகாக்கவில்லை? பொருளாதார நெருக்கடியால் படையினரின் குடும்பங்களும் துன்பப்படுவது மட்டும்தான் காரணமா?இந்த கேள்விகளுக்கு விடை வேண்டும்.
சம்பிக்க ரணவக்க கூறுகிறார் கோத்தா பதவி பதவி விலகாவிட்டால் அவரை ராணுவத்தளபதி கைது செய்ய வேண்டும் என்று.ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக படைத்தரப்பை முன்னிறுத்துவதில்லை என்ற கோத்தாவும் ரணிலும் கூட்டாக ஒரு தீர்மானம் எடுத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதன்மூலம் அவர்கள் படைத்தரப்பை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நிறுத்தவில்லை.அதாவது ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது வன்முறையை பிரயோகிப்பதற்குத் தேவையான கட்டளை படைத் தரப்புக்கு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களும் படைத்தரப்பை எதிரியாக பார்க்கவில்லை.
இது தமிழ் மக்கள் உற்றுக்கவனிக்க வேண்டிய ஒரு விடயம். அதாவது தமிழ் மக்கள் எந்த படைக்கப்பட்டமைப்பின் மீது போர் குற்றச்சாட்டை சுமத்துகின்றார்களோ,அதே படைக் கட்டமைப்பு தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களின் போது தன் சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கியைப் பிடிக்கவில்லை. ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு ராணுவ உயரதிகாரி ஒரு சிவிலியனை காலால் உதைக்கிறார். இது தவிர சில அருந்தலான மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.
ஆனால் பொதுப் போக்கு என்னவென்றால் படைத்தரப்பு பொதுமக்களோடு முட்டுப்பட விரும்பவில்லை,பொதுமக்களும் படைத்தரப்பை எதிரியாக பார்க்கவில்லை என்பதுதான்.பெரும்பாலான மோதல்கள் போலீசார் மற்றும் அதிரடிப்படையுடன்தான்.
அதாவது ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்கள் விருப்பத்தோடு ஏந்தி வைத்திருக்கும் சிங்கக் கொடியைப் போல, அவர்கள் விருப்பத்தோடு முதுகில் போர்த்தியிருக்கும் சிங்கக்கொடியைப் போல,படையினரையும் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளாகவே பார்க்கிறார்கள். தங்களுக்கு புறத்தியாகப் பார்க்கவில்லை. அவர்கள் தமது படை என்றுதான் பார்க்கிறார்கள் அதை எதிரியாக பார்க்கவில்லை .
இந்த இடத்தில்தான் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து சற்று விலகி நிற்பதற்கான காரணம் இருக்கிறது. இதன் பொருள் படைத்தரப்பும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோத வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதல்ல.
தமிழ் மக்கள் ராஜபக்சக்களின் மீது வைப்பது போர் குற்றச்சாட்டு.ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ச குடும்பத்தின் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் திருட்டு குற்றச்சாட்டுகள்தான்.போர்க் குற்றச்சாட்டுகளை வைப்பார்களாக இருந்தால் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக படைத்தரப்பையும் எதிரியாக்கும். ஏனென்றால் போர்க்குற்றச் சாட்டைப் பொறுத்தவரை படைத்தரப்பும் ராஜபக்சக்களும் ஒன்றுதான். ராஜபக்சக்கள் அரசியல் தீர்மானத்தை எடுத்து படைத்தரப்பை வழி நடத்தினார்கள்.அவர்கள் போட்ட உத்தரவுகளை படைத்தரப்பு நிறைவேற்றியது. எனவே இந்த விடயத்தில் எல்லாருடைய கைகளிலும் தமிழ் மக்களின் ரத்தம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எனது கட்டுரைகளில் நான் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியிலிருந்து இன்றுவரை தென்னிலங்கையில் இடம் பெற்று வரும் மக்கள் எழுச்சிகளின் போது இரண்டு சாட்சிகளை பார்க்கலாம் என்று. ஒன்று தமிழ்த் தரப்பு. மற்றொன்று படைத்தரப்பு. தமிழ்மக்கள் அதில் விலகி நிற்பதற்கு பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். ஆனால் படைத்தரப்பு விலகி நின்று ஆர்ப்பாட்டக்காரர்களோடு மோதாத ஒரு போக்கை கடைப்பிடித்து வருகிறது. அப்படி ஒரு மோதல் ஏற்படுவதை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு புத்திசாலித்தனமாக தவிர்த்து வருகிறது என்பதே சரி. ஆர்ப்பாட்டக்காரர்களும் இந்த விடயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
இப்பொழுது மிஞ்சி இருந்த ராஜபக்சவும் கவிழ்க்கப்பட்டு விட்டார். அவர் உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை.ஆனால் நடைமுறையில் அவர் இப்பொழுது நாட்டை நிர்வகிக்கவில்லை.எல்லா ராஜபக்ஷங்களும் பதவிகளைத் துறந்த பின்னரும் கோத்தா பதவியை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.ஏனெனில்,அதிகாரத்தில் இல்லை என்றால் தன்னையும் தனது குடும்பத்தவரையும் ஆதரவாளர்களையும் தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள் என்ற பயம் அவருக்கு உண்டு. மே மாதம் ஒன்பதாம் தேதி என்ன நடந்தது என்பது ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அனைவருக்கும் அச்சுறுத்தலான, திகில் நிறைந்த ஓர் அனுபவம்தான். எனவே அதிகாரத்தை இழப்பது என்பது தன் சொந்த பாதுகாப்பையும் இழப்பதுதான் என்று கோத்தா சிந்தித்ததன் விளைவாகத்தான் அவர் பதவியைத் துறக்க மறுக்கிறார்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் யாரிடமிருந்து அவருக்கு ஆபத்து? எதிர்க்கட்சிகளிடம் இருந்தா? அல்லது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்தா? அல்லது படைத்தரப்பிடம் இருந்தா? அவரும் படைத்தரப்பும் ஒன்றுதான். போர்க்குற்றம் என்று வரும் பொழுது இருவரும் ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பார்கள். எனவே படைத்தரப்பிடமிருந்து அவருக்கு ஆபத்து கிடையாது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் சிக்கினால் என்ன நடக்கும் என்று தக்கபூர்வமாக சிந்திப்பது கடினம். எனவே தன் சொந்த மக்களின் கோபத்திலிருந்து தப்புவதற்காகத்தான் அவர் ஓடி ஒழிய வேண்டி வந்தது. எந்த மக்கள் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குத் தேவையான மிகப்பலமான ஒரு பெரும்பான்மையை வழங்கினார்களோ, எந்த மக்கள் ஒரு இரும்பு மனிதர் வேண்டும் என்று கேட்டு அவரை விரும்பி பதவிக்கு கொண்டு வந்தார்களோ, அதே மக்கள் இப்பொழுது அவரை அவருடைய உத்தியோகபூர்வ மாளிகையில் இருந்து துரத்தியடித்து விட்டார்கள். அதே மக்களிடமிருந்து தன்னை பாதுகாப்பதற்காக அவர் எங்கேயோ ஒரு ரகசிய படைத்தளத்தில் ஒளிய வேண்டிய நிலை. தன் சொந்த மக்களிடமிருந்தே ஒழிய வேண்டிய ஒரு நிலை.
மே மாதம் ஒன்பதாம் பத்தாம் திகதியோடு ஒப்பிடுகையில் ஜூலை 9 அதாவது நேற்று வன்முறைகள் குறைவு.ஊடகவியலார்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.ரணிலின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.சுமார் மூன்று மாதகாலப் போராட்டத்தின் முடிவில் ராஜபக்சக்கள் துரத்தப்பட்டுள்ளார்கள்.கரு ஜெயசூரிய தெரிவித்திருப்பது போல அது மக்கள் எழுச்சிக்கு கிடைத்த ஒரு வெற்றிதான்.
ஆனால் அந்த மக்கள் எழுச்சி முழு நாட்டுக்கும் உரியது அல்ல. ஒன்பதாம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது “முழு நாடும் கொழும்புக்கு” என்று ஒரு கவர்ச்சியான சுலோகம் முன்வைக்கப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து 30-க்கும் குறையாதவர்கள்தான் சைக்கிளில் ஊர்வலம் போனார்கள். நகரப் பகுதியில் கிட்டத்தட்ட 100 பேர்தான் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினார்கள். கிழக்கிலும் நிலைமை அப்படித்தான். வடக்கு கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்திற்கு என்று போகவில்லை. தூரமும் போக்குவரத்து நெருக்கடியும் காரணங்களாக கூறப்படலாம். யாழ்ப்பாணத்தில் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்த கட்சிகள் பெருமளவுக்கு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவை.தமிழ்த் தேசிய நிலைபாட்டைக் கொண்ட காட்சிகள் இதில் இணையவில்லை.நேற்றைய ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்குக்கிழக்கில் பெருந்திரளான ஆதரவு கிடைக்கவில்லை.
இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் முன்னப்பொழுதும் பெற்றிராத ஒரு மகத்தான வெற்றியை பொதுமக்கள் பெற்றிருக்கிறார்கள்.அந்த வெற்றிக்காக நாடு முழுவதையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள்.ஆனால் வடக்கு கிழக்கில் இருந்து பெருந்தொகையானவர்கள் கொழும்புக்குப் போகவில்லை.இது எதைக் காட்டுகிறது? இலங்கைத்தீவு இப்பொழுதும் இப்பொழுதும் இரண்டாகப் பிரிந்து நிற்கிறது என்பதைத்தானே? இலங்கைத் தீவில் இப்பொழுதும் இரு வேறு கருத்து நிலைகளைக் கொண்ட மக்கள் கூட்டங்கள் வசிக்கின்றன என்பதைத்தானே?