Breaking News

உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்: உலக வர்த்தக மையம் எச்சரிக்கை!

 ரஷ்ய- உக்ரைன் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையம் எச்சரித்துள்ளது.


இதுகுறித்து உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா கூறுகையில்,

‘குறிப்பாக, கோதுமை மற்றும் உரங்கள் பற்றாக்குறையால் ஆபிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.

லட்சக்கணக்கிலான டன்கள் அளவுக்கு தானியங்கள் சேமிப்புக் கிடங்களில் கிடத்தப்பட்டுள்ளன. அவை போர் காரணமாக உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தானியங்களின் விலை உயர்வது உண்மையில் வேதனைக்குரியது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோதுமை விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலை 30 சதவீதம், சோளத்தின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது’ என கூறினார்.

உலகளவில் கோதுமையை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக உக்ரைன் உள்ளது. உலக சந்தையில் உக்ரைனின் கோதுமை ஏற்றுமதி 9 சதவீதமாக உள்ளது. மேலும் அந்நாட்டின் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி 42 சதவீதம் என்ற அளவிலும் சோளம் ஏற்றுமதி 16 சதவீதம் என்ற அளவிலும் இருக்கிறது.

தானிய விலைகள் உலக அளவில் உயர்ந்துவரும் நிலையில், கருங்கடல் துறைமுகங்களில் ரஷ்ய தடையாலும், கடற்கரையில் ரஷ்ய, உக்ரைனிய கண்ணிவெடிகளாலும் உக்ரைனில் 20 முதல் 25 மில்லியன் டன் கோதுமையை வெளியே அனுப்பமுடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஒடேசா மற்றும் மற்ற உக்ரைனிய துறைமுகங்களிலிருந்து வெளியேறும் டேங்கர்களுக்காக, துருக்கிய கடற்படை துணையுடன் தானிய வழித்தடத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஐ.நா மேற்கொண்டு வருகிறது.