சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்!
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி செய்யும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளின்கனுடன் (Anthony Blinken) தொலைபேசியில் உரையாடினார்.
இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து தான் இதன்போது விளக்கமளித்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் Anthony Blinken ஒப்புக்கொண்டார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ஜோ பிடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.