Breaking News

சுமார் 20 வாகனங்களை மோதிச்சென்ற கார் - பம்பலபிட்டியவில் சம்பவம்..



பம்பலப்பிட்டி வஜிர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 20 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் நேற்று (31) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி வீதியில் இருந்து வஜிர வீதியின் ஊடாக டூப்ளிகேஷன் வீதியில் பயணித்த கார் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விசாகா வித்தியாலயத்தை நோக்கி சென்றுள்ளது.

வீதியின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பலவற்றுடன் மோதி முன்னோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த பெற்றோரின் வாகனங்கள் வீதியின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

சுமார் 20 வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தின் பின்னர் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சாரதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.