உச்சகட்ட போர்: ரஷியா கைப்பற்றிய நகரங்களை மீட்ட உக்ரைன் வீரர்கள்!
உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் தொடங்கி 10 வாரங்களை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி வருவதாலும், ஆயுதங்கள் உதவி செய்து வருவதாலும் ரஷிய வீரர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போராடி வருகின்றனர்.
இதனால் ரஷியா தான் நினைத்தப்படி உக்ரைனை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பலியாகிவிட்டனர், லட்சக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
உக்ரைன் நகரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகிவிட்டன. ரஷியா படைகள் மும்முனை தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. குடியிருப்பு கட்டிடங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இதனால் கட்டிடங்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்து எலும்புக் கூடுகளாக காட்சி அளிக்கிறது.
உக்ரைனில் சிறந்த துறைமுக நகராக திகழ்ந்து வரும் மரியுபோல் நகரை கைப்பற்றியதாக ரஷியா அறிவித்தது. அங்குள்ள 100 கிலோ மீட்டர் பரப்பளவில் சுரங்க அறைகள் நிறைந்த இரும்பாலைக்குள் ஏராளமான பொதுமக்கள் உயிருக்கு பயந்து பதுங்கி இருந்தனர் ஜ,நா. பாதுகாப்பு உதவியுடன் பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அங்கு தற்போது உச்சகட்டபோர் நடந்து வருகிறது. இரும்பாலை பதுங்கு குழியில் ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பதுங்கி உள்ளனர். இதனை தகர்க்க ரஷியா முடிவு செய்து உள்ளது. இரும்பாலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷியா மும்முரமாக தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
கருங்கடல் பகுதியான ஒடேசா நகர் மீதும் ரஷியா தனது பார்வையை திருப்பி உள்ளது. அந்த நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. அங்கும் கடுமையான சண்டை நடந்துவருகிறது.
கார்கிவ் அருகே வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தது. இந்த பகுதிகளை கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில்உக்ரைன் போரில் அறிவிக்கபட்ட வர்களை விட அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக ஜ.நா. பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.