LTTE தாக்குதல் செய்தி - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!
இலங்கை கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் இலங்கையில் தாக்குதல்களை நடத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தகவல்கள் தொடர்பில் இந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் இந்திய புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரித்திருந்த நிலையில் அது பொதுவான தகவல் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஹிந்து நாளிதழ் கடந்த 13ஆம் திகதி இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
இலங்கை கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் இலங்கையில் தாக்குதல்களை நடத்துவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இரண்டு தடவைகள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சூழலில், பன்னாட்டு உறவுகளைக் கொண்ட புலம்பெயர் இலங்கைத் தமிழர்களில் சிலர் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் மோதல்களில் தங்கள் இலக்குகளை அடைய முயற்சிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மே 18ஆம் திகதி கொண்டாடத் தயாராகும் சில குழுக்கள் ´தமிழ் இனப்படுகொலை நாள்´ என அறிவித்து தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான பயங்கரவாதத் திட்டம் தீட்டுவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் குழுவொன்று தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, உளவுத்துறை மற்றும் உள்ளூர் பொலிஸாரின் சிறப்புக் குழுக்கள் மாநிலத்தில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கடலோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் மீனவர்களும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஆழ்கடலிலும் சர்வதேச கடற்பரப்பிலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது நபர்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஹிந்து செய்திகள் தெரிவிக்கின்றன.