Breaking News

தமிழர்களின் அறிவுப் புதையல் யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள்!

 


தமிழர்களின் அறிவுப் புதையல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் எரியூட்டப்பட்டது.

இன உரிமைப் போராட்டத்த்தை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ்நூலகத்தை எரித்தனர்.

இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள்.

தெற்காசியாவில் மிகப் பெரும் நூலாகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97 ஆயிரம் அரியவகையான புத்தகங்கள் காணப்பட்டன.

பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நுல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டன.

மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்ட நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்க உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன.