'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்!
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா, பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.
'தளபதி 66' படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது என்றும் அதில் ஒரு பாடல் அரபிக் குத்து பாடல் பாணியில் விஜய்யின் நடனத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்பாடலுக்கு நடனம் அமைக்க இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான பிரபு தேவா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.