கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் போராட்டம்!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று (புதன்கிழமை) பகல் 12 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதிவரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும், சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதார துறையினை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை என்பது தொடர்பான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் என இன மதம் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்புாது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வைத்தியர் குறிப்பிடுகையில், இன்று மருந்து மற்றும் சத்திரசிகிச்சைக்கு தேவையான பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இருப்பதைக்கொண்டு மக்களிற்கு சேவையை வழங்கி வருகின்றோம்.
சிக்கனமாக பயன்படுத்துகின்றோம். இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களிற்கு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.