எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்த அலி சப்ரி!
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியை நாடுவதை தவிர வேறு எந்த தீர்வும் இல்லை என முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்றைய (07) தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரம் (ISB) வருகின்ற ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதை நாம் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க நாம் விரைவாக செயல்பட வேண்டும்” எனவும் முன்னாள் நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின்படி, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றில் உதவிகள் பெறுவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
“நாம் பலதரப்பு முகவர் நிறுவனங்களுடன் இணைந்து கடன் மறுசீரமைப்பை செய்ய வேண்டும் எனவும், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று எதிர் கட்சிகள் எங்களுடன் இணைந்து செயற்றப்பட்டால் பெரும் நம்பிக்கையை வழங்கும் எனவும் மேலும் நாங்கள் ஒரு பொது முன்னணியாக முன்னோக்கி செல்ல வழிவகுக்கும்” என்றும் அவர் கூறினார்.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான பொறுப்பு உள்ளது என்று கூறினார் .
"நீங்கள் உங்கள் நிபுணத்துவத்தை அரசாங்கத்தின் நலனுக்காக பயன்படுத்தாமல், நாட்டின் நலனுக்காக பயன்படுத்துங்கள் " எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு தனது நிபுணத்துவத்துடன் உதவுமாறு SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அழைத்து சப்ரி, நிதியமைச்சர் நல்ல செவிசாய்ப்பவராகவும், நல்ல முடிவுகளை எடுப்பவராகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை பாராளுமன்றத்தில் தீர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு நடக்கவில்லை என்றால் நாடு பாரதூரமான நிலைமைகளை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும், நாம் லெபனான் போன்று மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” எனவும் கூறினார்..