அறிவியல் அதிசயம்: நண்பர்கள், எதிரிகளை குரலை வைத்து அடையாளம் காணும் நீர்யானைகள்!
காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும்.
'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது.
ஆப்ரிக்காவில் நீர்யானைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், அந்த தனித்துவமான ஒலி, தன் நண்பர்கள் முதல் எதிரிகள் வரை பிரித்துக் கூற பயன்படுவதாகக் கூறுகின்றனர்.
மேலும் நீர்யானைகள் தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற நீர்யானைகளின் குரலைக் கொண்டு, தனித்துவமாக அடையாளம் கண்டு கொள்ளும் எனவும் கூறியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள செயின்ட் எடின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிகோலஸ் மதேவொன், சிறுத்தைப் புலிகள், நீர் நாய்கள், ஹைனாக்கள் என பல உயிரினங்களின் குரல்களை ஆய்வு செய்துள்ளார்.
சூப்பர் மவுண்டன்கள்.! இமயமலையை விட 4 மடங்கு பெரியதாம்.. என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமாசூப்பர் மவுண்டன்கள்.! இமயமலையை விட 4 மடங்கு பெரியதாம்.. என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா
நீர்யானைகள் பல விதமாக குரல் வழி ஒலி எழுப்பும். உச்சபட்சமாக நீண்ட ஒலி எழுப்புவது, மிகவும் அடிக்குரலில் ஒலி எழுப்புவது என பலவிதமாக ஒலி எழுப்பும். ஆனால் அதன் சமூகத் தொடர்பு குறித்து நமக்கு குறைவாகவே தெரியும் என்கிறார் பேராசிரியர் நிகோலஸ்.
"நீர்யானைகளின் குரல்களில், அதன் தனிப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன, எனவே ஒவ்வொரு நீர்யானைக்கும் தனி குரல் இருக்கின்றன. அவைகள் தங்கள் கூட்டத்திலுள்ள நீர்யானைகளின் குரலைக் கொண்டு அடையாளம் காண முடிகிறது" என்கிறார் அவர்.
மேலும், "இந்த குரலை அடையாளம் கண்டு கொள்ளும் திறன், நீர்யானைகளுக்கு மத்தியிலான சமூக உறவுமுறைக்கு உதவுகிறது" என்றும் கூறினார் பேராசிரியர் நிகோலஸ் மதேவொன்.
நீர்யானைகளின் தகவல் தொடர்பு குறித்து மேற்கொண்டு பல விவரங்களைக் கண்டுபிடிக்க, பிரான்ஸ் ஆய்வாளர்கள் மொசாம்பீக்கில் உள்ள மபுடோ சிறப்பு காப்பகத்தில் வாழும் நீர்யானைகளின் ஒலிகளைப் பதிவு செய்தனர்.
அதில், நீர்யானைகள் எழுப்பும் 'வீஸ் ஹாங்க்ஸ்' என்றழைக்கப்படும் ஒருவிதமான பொதுவான மற்றும் ஒலி மிகுந்த ஓசை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை கேட்பதாக ஆய்வு கூறுகிறது.
உயிரியலாளர்கள் பதிவு செய்த இந்த வீஸ் ஹாங்க் ஒலிகளை, ஏரிக் கரைகளிலிருந்து ஒலிக்கவிட்டு, அதற்கு மற்ற நீர்யானைகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பார்த்தனர்.
நீர் யானைகளால் தன் நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமில்லாத நீர்யானைகளை அதன் குரலோசையைக் கொண்டு அடையாளம் கண்டு பிரித்துக் கூற முடிந்தது என கண்டுபிடித்துள்ளனர்.
நண்பர்கள் முதல் எதிரிகள் வரை அடையாளம் கண்டு கொள்வதைத் தாண்டி, ஒவ்வொரு நீர்யானையும், மற்ற நீர்யானைகளின் குரலைக் கொண்டு வேறுபடுத்தி அடையாளம் காண முடியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்களால் இதை உறுதியாகக் கூற முடியவில்லை.
நீர் நிலைகளில் நீர்யானைகள் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போது, ஆராய்ச்சியாளர்கள் எழுப்பிய ஒலிக்கு, மிகுந்த கவனம் கொடுத்து எதிர்வினையாற்றின.
முன்பின் அறிமுகமில்லாத நீர்யானைகளுக்கு விரைவாகவும், ஒலி மிகுதியாகவும், குறைந்த இடைவெளியில் அடிக்கடி கோபமாக எதிர்வினையாற்றின. மேலும் தன் எல்லையை குறிப்பிடும் விதத்தில் தன் கழிவையும் வெளியேற்றி எதிர்வினையாற்றியது.
மனிதர்கள் மற்றும் நீர்யானைகளுக்கு இடையிலான மோதலைத் தவிர்க்க, நீர்யானைகளின் உயிரியல் மற்றும் நடத்தைகளைக் குறித்து அறிவது அவசியம் என பேராசிரியர் நிகோலஸ் கூறினார்.
தங்களின் சமூகத்தில் உள்ள நீர்யானைகளை நல்ல உடல் நலத்தோடு வைத்திருக்க, சில நேரங்களில் நீர்யானைக் கூட்டங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயரும், மேலும் இந்த அறிவு, விலங்குகளைப் பாதுகாக்க உதவிகரமாக இருக்கலாம் என்று கூறினார் பேராசிரியர் நிகோலஸ்.
நீர்யானைகளின் ஓலிகளைப் பதிவு செய்து, உள்ளூரில் உள்ள நீர்யானைகள் புதிய நீர்யானைகள் வருவதற்கு முன்பே அவற்றின் சத்தத்துக்கு பழக்கப்பட இந்த ஆய்வுப் பணி உதவலாம் என்றும் நிகோலஸ் கூறினார்.
இதுவரை நீர்யானைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் பட்டியலில் இல்லை என்றாலும், அதன் எண்ணிக்கை அதிவேகமாகக் குறைந்து வருகிறது.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான மோதலில் நீர்யானைகளும் ஒன்று. ஒவ்வோர்ஆண்டும், நீர்யானை காரணமாக உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகின்றன.
இந்த ஆய்வுக்குறிப்பு 'கரன்ட் பயாலஜி' என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.