நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார். சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும் மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுருந்தார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.