கவர்ச்சியாக நடிக்க எல்லை உண்டு - கீர்த்தி சுரேஷ்!
முன்னணி நடிகைகள் பலர் கவர்ச்சிக்கு மாறி உள்ளனர். ஒரு பாடலுக்கு அரைகுறை உடையில், கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடவும் கதாநாயகிகள் சம்மதிக்கின்றனர். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில், சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் கீர்த்தி சுரேசிடம் கவர்ச்சியாக நடிப்பீர்களா? குத்தாட்டம் ஆடுவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை, நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது அதிர்ஷ்டம் காரணமாக எல்லாமே நல்ல கதாபாத்திரங்களாக அமைந்தன. கவர்ச்சியாக நடிக்கும் விஷயத்தில் எனக்கென்று சில எல்லைகளை வைத்து இருக்கிறேன்.
எந்த நிலையிலும் அதை மீற மாட்டேன். தேகத்தை காட்டி கவர்ச்சியாக நடிக்கும் கதாபாத்திரங்களில் நான் நடிப்பது இல்லை. முந்தைய படங்களில் நான் எப்படி வந்தேனோ அப்படி நடித்தால்தான் ரசிகர்கள் என்னை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். எனவே, அதுமாதிரியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’’ என்றார்.