தலைமையில்லாத மக்கள்? - நிலாந்தன் கட்டுரை ...
புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய மற்றும் பெரிய வரிசைகளில் நின்று எரிபொருளை நிரப்பக் கூடியதாக இருந்தது. ஆனால் மதியமளவில் ஒரு செய்தி வெளிவந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ஆயிரம் ரூபாய் வரையிலும் மோட்டார் கார்களுக்கு 1500 ரூபாய் வரையிலும் தான் பெட்ரோல் நிரப்பலாம் என்று அச்செய்தி தெரிவித்தது. அதன்பின் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டேன். கிளிநொச்சியில் தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலும் பெரும்பாலும் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் ஒன்றில் மூடப்பட்டிருந்தன. அல்லது பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்போடு காணப்பட்டன.
ஏன் அப்படி மூடினார்கள் ?ஒரே நாளில் ஒரே நேரத்தில் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எப்படி பெட்ரோல் தீர்ந்து போனது? சில நாட்களில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கலாம் என்பதை ஊகித்த முதலாளிகள் பெட்ரோலை பதுக்கினார்கள் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டு சரியா?
எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் தொடர்பாகவும் அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் உண்டு.ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் எரிவாயு சிலிண்டர்களை எப்படியோ பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நாள் முழுக்க வரிசையில் நிற்பவர்களிற் பலர் அவ்வாறு அதிஷ்டசாலிகள் இல்லை. அதிலும் சிலர் எரிபொருளுக்காக காத்திருக்கும் பொழுது இறந்து போய்விட்டார்கள். வேறுசிலர் காத்திருந்த களைப்பில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளின் கீழ் உறங்கி விடுகிறார்கள். சாரதிகள் பேருந்துகளை இயக்கும் போது அவற்றுக்குக் கீழே உறங்குபவர்களைக் கவனிப்பதில்லை. அதனால் சிலர் பேருந்துகளில் நசியுண்டு இறந்து போகிறார்கள். இவ்வாறாக இதுவரையிலும் இலங்கைத்தீவில் எரிபொருள் எரிவாயு வரிசைகளில் நின்று இறந்தவர்களின் தொகை ஒன்பதுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மட்டும் மக்களை மிதிக்கவில்லை. வர்த்தகர்களும் மக்களை மிதிக்கிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.சித்ராப் பவுர்ணமியையொட்டி திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகள் அகோர விலைக்கு விற்கப்பட்டன.ஒரு கிலோ முருங்கைக்காய் 1,600 ரூபாய்க்கு மேல் போனது. ஒரு பிடி கீரை 160 ரூபாய் வரை போனது. ஒருவர் பகிடியாகச் சொன்னார்…ஆட்டு இறைச்சியும் 3000 ரூபாய், பாகற்காயும் 3000 ரூபாய் என்று.ஏன் இப்படி விலைகள் தாறுமாறாக இருக்கின்றன என்று கேட்டால் தம்புள்ளையில் இருந்து வாகனங்கள் வரவில்லை என்று கூறினார்கள். அப்படி என்றால் உள்ளூர் மரக்கறியின் விலையை தீர்மானிப்பது யார்?
முட்டையின் விலை இப்பொழுது இறங்கி வருகிறது. ஏன் என்று கேட்டேன். ஒரு கடைக்காரர் சொன்னார்…சாப்பாட்டுக் கடைகள் இயங்குவது குறைவு என்பதால் முட்டை நுகர்வு குறைந்து விட்டது, அதனால் தான் விலை இறங்கியது என்று. ஆனால் அவர் கூறிய அளவுக்கு சாப்பாட்டுக் கடைகள் மூடப்படவில்லை. முட்டை விலை இறங்கினாலும் கோழி இறைச்சியின் விலை இறங்கவில்லை. ஏன் என்று ஒரு இறைச்சிக் கடைக்காரரிடம் கேட்டேன். தெற்கிலிருந்து முட்டையைக் கொண்டு வருகிறார்கள், ஆனால் கோழியை கொண்டு வருவதில்லை என்று அவர் சொன்னார். இப்படி எத்தனையோ காரணங்களைக் கூறுகிறார்கள்.காரணங்கள் சரியாகவும் இருக்கலாம் அல்லது புனையப்பட்டவைகளாகவும் இருக்கலாம். ஆனால் விலைகள் மட்டும் எந்த ஒரு தர்க்கத்துக்குள்ளும் அகப்படாமல் ஏறிக்கொண்டே போகிகின்றன. வியாபாரிகள் வைத்ததே விலை என்று வந்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த யாருமில்லை.
பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அரசியல் நெருக்கடியும் யாப்பு நெருக்கடியும் ஏற்பட்டிருக்கின்றன.இதனால் நாடு அரசற்ற ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.இந்த அரசற்ற நிலை காரணமாக விலைகளை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அருகருகே வாழும் அயலவர்கள் எரிவாயு வாங்கப் போகும்போது ஒருவர் மற்றவருக்கு சொல்லாமல் ரகசியமாக போகிறார்கள். ஏனென்றால் அப்படிச் சொன்னால் அரிதாக கிடைக்கும் அப்பொருளை நுகர்வதற்கு மற்றவரும் போட்டிக்கு வந்து விடுவார் என்பதே காரணம்.ஒரு சமூகத்தின் கூட்டுணர்வையே சிதைக்கும் அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றனவா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 கட்சிகள் யாழ் இளங்கலைஞர் மன்றத்தில் கூடிய பொழுது அதில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். அதற்கு முன்னரும் எனது எழுத்திலும் பேச்சிலும் இதுபற்றி அதிகமாக குறிப்பிட்டிருக்கிறேன். தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசம் என்று நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் தேசமாகத் திரட்சியாக இல்லை என்பதைத்தான் வியாபாரிகளின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றனவா? அரசாங்கம் ஒருபக்கம் மக்களை வதைக்கிறது என்றால் இன்னொரு பக்கம் வர்த்தகர்களும் வதைக்க்கிறார்களா? இந்த விடயத்தில் வர்த்தகர்களை தட்டிக் கேட்பது யார்? அரசியல் கட்சிகளுக்கு இதில் பொறுப்பு கிடையாதா? மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்,கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள்,இந்த விடயத்தில் வர்த்தகர்களோடு கதைத்து பொதுமக்களின் கஷ்டத்தை ஒப்பீட்டளவில் குறைக்க முடியாதா? நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவது என்பது அதுதானே ?
அறிக்கை விட்டால் மட்டும் போதாது, நாடாளுமன்றத்தில் கூர்மையான உரைகளை நிகழ்த்தினால் மட்டும் போதாது, அதற்கும் அப்பால் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்பது நடைமுறையில் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதே.எனவே தேசத் திரட்சியின் ஒரு கூறாக அமையும் வணிகர்களோடு இது தொடர்பில் ஏன் எந்த ஒரு அரசியல்வாதியும் உரையாடத் துணியவில்லை? என்று அக்கூட்டத்தில் நான் கேள்வி எழுப்பினேன்.
மக்கள் பிரதிநிதிகளாக இருப்பது என்பது மக்களுக்கு தலைமை தாங்குவதுதான். மக்களுக்கு தலைமை தாங்குவது என்பது நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது. மக்களை அடுத்தகட்டத்துக்கு தயார்படுத்துவது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மக்களைத் தூண்டுவது. அதற்கு வேண்டிய கட்டமைப்புக்களை உருவாக்குவது. அதாவது மக்களை அமைப்பாக்குவது. திரள் ஆக்குவது.
ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பெரும்பாலான அரசியல்வாதிகள் இப்பொழுது மட்டுமல்ல இதற்கு முன்னரும் பெரும் தொற்று நோய் சூழலுக்குள் அவ்வாறு மக்களுக்கு தலைமை தாங்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியை பெற்று நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது,மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.வழிகாட்ட வேண்டும். அதுதான் தலைமைத்துவம் என்றெல்லாம் நான் கட்டுரைகளை எழுதினேன்.விக்னேஸ்வரன் ஒரு கேள்வி-பதில் அறிக்கையில் அது தொடர்பான சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.அதற்குமப்பால் மக்களை அமைப்பாக்கும் செயற்றிட்டம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை.
இப்பொழுது பொருளாதார நெருக்கடி வந்திருக்கிறது. அரசாங்கத்தின் உரக் கொள்கை காரணமாக விவசாயம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து விட்டது. இதனால் இன்னும் இரண்டு மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு வரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.அரசாங்கம் அரிசியை இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்க முயற்சிக்கிறது.அரசாங்கம் அதைச் செய்யட்டும்.ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டக் கூடாது?நெருக்கடியான காலகட்டங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வழி காட்டுவதுதான் தலைமைத்துவம்.அப்படிப்பட்ட தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்த்தேசிய அரங்கில் இப்பொழுது உண்டு?
அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு வெளியே இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் மக்களுக்கு வழிகாட்டவல்ல சிவில் சமூகத் தலைமைகள் எத்தனை உண்டு? ஆன்மீக தலைமைகள் எத்தனை உண்டு?
இதுதொடர்பாக யாழ் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரிடம் உரையாடினேன். அவர் சொன்னார்….இப்போது நிலவும் விலை உயர்வை எந்த அரசியல்வாதியாலும் தீர்க்க முடியாது என்று.நாட்டின் பொருளாதார நிலைமை அந்தளவுக்கு மோசமான ஒரு கட்டத்தை அடைந்து விட்டது என்றும் அவர் கூறினார். இறக்குமதி செய்வதற்கு வணிகர்கள் பயப்படுகிறார்கள். யாராவது முன்வந்து இறக்குமதி செய்வார்களாக இருந்தால் அவர்களுடைய காலில் பூ போட்டுக் கும்பிடலாம் எனுமளவுக்கு நிலைமை காணப்படுகிறது. ஒரு தொகுதி பெரு வணிகர்கள் இறக்குமதி நடவடிக்கைகளை நிறுத்திவிட்டார்கள். இறக்குமதி குறைந்தால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் பெரும்பாலான வணிகர்கள் ஆறுமாதக் கடனில்தான் பொருட்களை இறக்குவதுண்டு.அப்பொருளை விற்று கடனை அடைக்கும் காலகட்டத்தில் டொலரின் விலை எங்கேயோ போயிருக்கும். அதாவது பொருளை இறக்கும் போது இருந்ததை விட பலமடங்கு அதிகரித்திருக்கும். இதனால் வரக்கூடிய மேலதிக நட்டத்தையும் கவனத்தில் எடுத்தே வணிகர்கள் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கிறார்கள். எனவே இது விடயத்தில் டொலரின் பெறுமதியைக் கட்டுப்படுத்தும் சக்தியுள்ள அரசியல்வாதிகள்தான் விலைகளையும் கட்டுப்படுத்தலாம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அப்படிப்பட்ட சக்தி இல்லை என்பதால் அவர்களில் யாராலும் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் எரிவாயு விநியோகத்தில் எரிவாயு கம்பெனிகளின் தலையீடு காரணமாக சில சீரற்ற விநியோகங்கள் இடம் பெற்றிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். எரிவாயுவை அந்தந்தப் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஊடாக வழங்கினாலே போதும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏதோ ஒரு விதத்தில் திருப்திப் படுத்துவார்கள்.ஆனால் கிராமமட்ட விநியோகஸ்தர்களிடம் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக வேறு சில நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டதால் அதிக முறைப்பாடுகள் வந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும்,எரிவாயுவும் உட்பட பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் சக்தி வர்த்தக சங்கங்களிடமும் இல்லை, எந்த ஒரு சமூக முகாமைத்துவத்திடமும் இல்லை என்று அவர் முடிவாகச் சொன்னார். அதாவது,நெருக்கடியான ஒரு காலகட்டத்தில்,பொருட்கள் பதுக்கப்படுவது,நியாயமற்ற விலை உயர்வு போன்ற விடயங்களில் வணிகர்கள் மீது செல்வாக்கைப் பிரயோகிக்கவல்ல பலமான தலைமைத்துவம் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை? பொருட்களின் விலைகளும் இறக்கப்போவதில்லை.ராஜபக்சக்களும் சிம்மாசனத்தை விட்டு இறங்கப்போவதில்லை.ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்பும்வரை காலிமுகத்திடலில் கூடியிருக்கும் மக்களும் வீட்டுக்குப் போகப் போவதில்லை?