விஞ்ஞானிகள் சாதனை - புற்றுநோய் செல்களை கண்டறியும் எறும்புகள்!
புற்றுநோய் செல்களை எறும்புகள் எளிதில் மோப்பம் பிடித்து கண்டறிவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஏற்கனவே மனிதர்களில் புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதைவிட எளிதாக செலவு குறைந்த முறையில் எறும்புகள் புற்றுநோய் செல்களை கண்டறிகிறது என தெரியவந்துள்ளது. இதற்காக ஆராய்ச்சிக் குழு ஃபார்மிகா ஃபுஸ்கா(Formica fusca ants) என்றவகை எறும்புகளைப் பயன்படுத்தியது.
இது சில்கி எறும்புகள்(silky ants) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எறும்புகளுக்கு பயிற்சி கொடுத்த சில நிமிடங்களிலேயே அவைளின் தினசரி செயல்களுக்கு வாசனையை பயன்படுத்தும் விதத்தில் மனித புற்றுநோய் உயிரணுக்களில் இருந்து ஆரோக்கியமான மனித செல்களை வாசனையின் மூலம் கண்டுபிடித்து வேறுபடுத்த முடிந்தது என்று பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மிக அதிக செலவுகளை ஏற்படுத்தாமல் புற்றுநோயை விரைவாகவும் திறமையாகவும் முன்கூட்டியே கண்டறிவதற்கான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
மனித புற்றுநோயின் உயிரியக்கக் குறிப்பான்களைக் கண்டறிய எறும்புகளை உயிருள்ள கருவிகளாகப் பயன்படுத்துவது மற்ற விலங்குகளைப் பயன்படுத்துவதை விட மிகவும் சாத்தியமானது எறும்புகள் மிகக்குறைவான உழைப்பின் மூலம் வேகமாக புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்கிறது என்று எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவித்தனர்.
எறும்புகள் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு புற்றுநோயை கண்டுபிடிக்கும் செயலில் புதிய ஒரு சகாப்தத்தை படைத்துள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். தொடர்ந்து எறும்புகளை வைத்து புற்றுநோயை கண்டுபிடிக்கும் ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால் மனிதர்களில் புற்றுநோய் ஏற்படுவதை மிக எளிதாக வேகமாக கண்டுபிடிக்க முடியும். அதன் மூலமாக புற்றுநோயை குணப்படுத்துவதும் எளிது என விஞ்ஞானிகள் கூறி உள்ளார்கள்.