உக்ரைன் தலைநகரில் ராணுவ நடவடிக்கை தீவிரமாக குறைக்கப்படும்: ரஷியா
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இருநாட்டு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி விரும்பியது. இதனால் அந்த நாட்டின் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இருநாட்டு வெளியுறவுத்துறை அளவிலான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்கனவே துருக்கி ஏற்பாடு செய்திருந்தது. அதில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரில் ராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பிடித்திருந்த பேச்சுவார்த்தையாளர்கள், உக்ரைன் நடுநிலை மற்றும் அணு ஆயுதம் இல்லாத நிலை ஆகியவற்றை நோக்கி நகர்வதால் இந்த பேச்சுவார்த்தையில் எங்களை இந்த முடிவை எடுக்க வைத்தள்ளது என்றனர்.
பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி ‘‘பேச்சுவார்த்தையில் அர்த்தமுள்ள விவாதங்கள் இருந்தன. உக்ரைனின் முன்மொழிவுகள் அதிபர் புதினிடம் வழங்கப்படும்’’ என்றார்.