Breaking News

சர்வ கட்சிகள் மாநாடு இன்று...


 சர்வ கட்சிகள் மாநாடு இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.


ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் அரசாங்கத்திடம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

அவ்வாறான அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிவதற்காக ஜனாதிபதி இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜாதிக ஜன பலவேகய, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஜனநாயக ஜனதா பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட 11 அரசாங்கப் பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதான மற்றும் வண.அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்துக் கட்சி மாநாட்டில் தாங்களும் கலந்து கொள்வதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என இலங்கை மக்கள் காங்கிரஸும் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.