என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகள் தடுமாறுகின்றனர் - நஸீர்அஹமட்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு உச்சக் கட்டத்திற்குப் போய் மக்களுடைய இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கின்ற ஒரு பயங்கரமான கால கட்டம். மக்கள் ஒரு வேளை உணவுக்காக போராடுகின்ற நிலைமை.
நாட்டின் நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து கடந்த 70 வருட காலமாக இந்த நாடு ஒரு தவறான அரசியல் வழி நடத்தலில் சிக்குண்டதான் விளைவாகத்தான் இப்பொழுது இந்த நாடு இந்த நிலைமைக்கு வந்து பாதிக்கப்பட்டு நிற்கின்றது.
நாட்டை விற்றால்ததான் கடன் சுமை தீருமென்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கின்றது. எந்த அரசியல் தலைமைகள் இந்த நாட்டை ஆண்டபோதும் கடன் தொகை கூடியதே தவிர குறையவில்லை. அதனால்தான் பாரிய சிக்கலுக்குள் இந்த நாடு அகப்பட்டிருக்கின்றது.
அதேவேளை இந்த நாட்டிலே இடம்பெறுகின்ற அரசியல் விடயங்களை முஸ்லிம் சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக இருந்து விட முடியாது.
ஐநா மனித உரிமைகள் தொடங்கி இந்திய பிராந்திய அரசியல் என்று காய் நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை முஸ்லிம் சமூகம் உற்றுக் கவனித்து இராஜதந்திர ரீதியில் பல விடயங்களை காய் நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.” என்றார்.