இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்துவோமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இடமாற்றம் தொடர்பாக தொழிற்சங்க சபையினால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாது, வடமாகாண கல்விப்பணிப்பாளர் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். இதன் மூலமே கல்வித்துறைக்கு மிக நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்த இடமாற்றங்கள் அதாவது வெளிமாவட்ட ஆசிரியர்களின் சேவையின் அடிப்படையில் இடமாற்றம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் கல்வி அமைச்சின் அலுவலகத்தையும், ஆளுநர் செயலகத்தையும் முடக்குவோம்.
அரசியல் செல்வாக்கு காரணமாக சில ஆசியர்கள் இந்த இடம்மாற்றத்துக்கு உள்வாங்கப்படவில்லை. அதாவது அவர்களுக்கு வசதியான இடத்தில் நியமனங்களைப் பெற்று நீண்ட காலமாக உரிய இடமாற்றம் இல்லாமல் அதே பாடசலையில் சேவை செய்து வருகின்றனர்.
இது தவறு. இடமாற்ற கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.