Breaking News

ரஷியாவால் ஒருபோதும் உக்ரைனை வீழ்த்த முடியாது- ஜோ பைடன்!

 


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. 14-வது நாளாக தாக்குதல் நீடித்த போதிலும் ஒரு சில நகரங்களை மட்டுமே ரஷியாவால் கைப்பற்ற முடிந்தது.

இந்த போரால் பொதுமக்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை காரணமாக உலகம் முழுவதும் ரஷியாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்தநிலையில் உக்ரைனை, ரஷியாவால் ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற முடியும். ஆனால் அவரால் அந்த நாட்டை வீழ்த்த முடியாது. ரஷிய அதிபரால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.

20 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். இது ஒரு பயங்கரமான செயலாகும். ரஷியாவின் இந்த தொடர் தாக்குதலால் அந்த நாடு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உதவியாக இருக்கும். உக்ரைன் எல்லையில் இருக்கும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளால் பராமரிக்கப்படுகிறார்கள். இதில் அமெரிக்காவும் பங்கேற்று கொள்ளும்.

புதினின் இந்த போர் நடவடிக்கையால் பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பெரிய துன்பம் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற உயிரிழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் புதின் தனது கொலைக்கார பாதையில் என்ன விலை கொடுத்தாலும் தொடர்வதில் உறுதியாக இருக்கிறார்.

உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக்காக துணிச்சலாக போராடுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். கொடுங்கோல், அடக்கு முறை, வன்முறை மூலம் அடிபணிய செய்யும் செயல்களுக்கு எதிராக நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம்.

இந்த போரின் வரலாற்றை எழுதும் போது உக்ரைன் மீதான புதினின் போர் ரஷியாவை பலவீனமாக காட்டும். மற்ற உலக நாடுகளை வலுவானதாக காட்டும்.

இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.