தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால்.....
மிக அற்புதமான சுவையை கொண்ட பேரித்தம் பழத்தை தினமும் நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் பேரித்தம் பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் ஆரோக்கிய நன்மைகளை கூடுதலாக கொடுக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு பேரித்தம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பேரிச்சம் பழத்தில் மிக அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. தினமும் பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் அசதி சோர்வு இருக்காது. எப்பொழுதும் தெம்பாக வேலை செய்துகொண்டே இருக்கலாம். பேரிச்சம்பழத்தில் பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இது ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
பேரிச்சம்பழம் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. நம்முடைய உடலில் நார்ச்சத்து குறையும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. ஆகையால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பேரீச்சம் பழங்களை நீங்கள் சாப்பிட்டு வரும்பொழுது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பேரிச்சம்பழம் குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மலம் சாதாரணமாக வெளியேற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
ஆரோக்கியமான சருமத்தை பெற தொடர்ந்து பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வாருங்கள். பேரீச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பி5 மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான தோல் பராமரிப்பிற்கு உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் பி6 உங்களுடைய தோலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனால் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இளவயதில் மிக வேகமாக வயதாவது போன்ற தன்மையை குறைக்கிறது.
தொடர்ந்து முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் பேரித்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய முடி ஆரோக்கியம் அடைய தொடங்கும். வைட்டமின் பி5 மற்றும் இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம் உங்கள் முடி உதிர்தலை தடுக்க கூடிய சக்தி கொண்டது. ஏனென்றால் இது உங்களுடைய உச்சந்தலையில் சரியான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமான பொடுகை இது குறைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் பேரீத்தம் பழத்தை நீங்கள் சாப்பிட்டு வரும்பொழுது இந்த வித்தியாசத்தை கண்டறிய முடியும்.
பேரிச்சம்பழம் குடல் புழுக்களை அழிக்க உதவுகிறது. பேரிச்சம்பழத்தை காலையில் நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது அது குடலில் இருக்கக்கூடிய ஒட்டுண்ணிகளை அழித்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பேரிச்சம்பழம் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. பேரிச்சம்பழத்தில் கொலஸ்ட்ரால் இல்லாத நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து காணப்படுகிறது. இதனால் பேரிச்சம்பழம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
பேரிச்சம் பழத்தை தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும்பொழுது அது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் காணப்படுவதால் தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வரும் பொழுது இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் பேரிச்சம் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வரும்பொழுது இதில் இருக்கக்கூடிய கலோரிகள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் தேவைப்படுவதால் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பேரிச்சம்பழம் ஆரோக்கியமானதுதான். ஆனால் தொடர்ந்து நீங்கள் பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு வரும்பொழுது இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொள்வது வேறு பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.