ஈழத் தமிழர் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம்-க.வி.விக்னேஸ்வரன்!
ஆறு கட்சிகள் இணைந்து நடத்தும் ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கில் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை....
அன்புக்குரிய இங்குள்ள அனைவருக்கும் வணக்கம்!
ஆறு கட்சிகள் சேர்ந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கத்தில் பங்குபற்றுவதில் மனமகிழ்வடைகின்றேன். சென்ற வாரம் Times of India என்ற இந்தியப் பத்திரிகையின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒருபேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒருவிடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் கேட்டார். அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ´ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்´ என்று தான் கோரி வருகின்றோம் என்றேன். எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு படி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன்.
ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக் கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.
ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை. இந்தியாவிற்கெதிரான கருத்துடைய எமது 24 கரட் கட்சி, அதன் தாய்க் கட்சியின் யாப்பு இன்று வரையில் ஒற்றையாட்சியே எமக்கு வேண்டும் என்று கூறினாலுங்கூட, தேர்தல் காலத்தில் சமஷ்டியே தமது குறிக்கோள் எனக் கூறி வருகின்றார்கள். ஆகவே அவர்களும் கொள்கை ரீதியாக எங்களுடன் தான்! மலை உச்சியில் இருந்து உண்மை உணர்ந்து அவதரணம் செய்து மக்களுடன் மக்களாக நின்று சிந்தித்து எங்கள் எல்லோருடனும் ஒருங்கிணைந்து செயலாற்ற அக்கட்சி ஒத்துக் கொண்டிருந்தால் எமதுமக்களின் அரசியல் பலம் இன்னும் மேலோங்கியிருக்கும். இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை என்று அவர்களுக்கு இந்த உரையின் ஊடாக அன்புடன் எடுத்துக்கூறிவிட்டு இன்றைய தலையங்கத்திற்கு வருகின்றேன். ´ஈழத் தமிழர் தீர்வில் நாடாளுமன்றத்தின் வகிபாகம்´ என்பது தலையங்கம்.
எனவே தமிழ்ஈழத் தமிழருக்கு அப்பாற் போய் இலங்கை எங்கிலும் வாழும் சகல தமிழ் மக்களையும் உள்ளடக்கியே தலையங்கம் நிற்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும். தமிழீழம் என்றால் இலங்கையின் வடக்கு கிழக்கையே அச் சொல் குறிக்கும். ஈழம் என்றால் முழு இலங்கையையும் குறிக்கும். எனவே வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு அப்பால் சென்று மலையகத் தமிழர்களையும் வடக்குகிழக்கு தவிர்ந்த கொழும்புத் தமிழர்களையும் உள்ளடக்கிய மற்றைய மாகாணத் தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்தே மேற்படி தலையங்கம் தரப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக இந்நாட்டின் தமிழ் மக்களின் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம் என்னவாக இருக்கலாம் என்பதே கேள்வி. அப்படித்தான் நான் இந்தத் தலையங்கத்தைப் புரிந்து கொண்டுள்ளேன். எனினும் நான் பொதுவாகவும் தமிழீழத் தமிழர்கள் பற்றி சிறப்பாகவும் சிந்தித்துப் பேச விழைகின்றேன்.
முழு நாட்டினதும் தமிழ் மக்களைப் பற்றிப் பார்க்கும் போது நாம் சுதந்திரம் கிடைத்த காலத்திற்கு முன்பிருந்தே ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால் இலங்கைக்கான பாராளுமன்றம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய சதிகள் சுதந்திரத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டன. அச்சதிகளே இன்று இந்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்றத்தை எமக்குத் தந்துள்ளன.
சதிகள் பற்றி ஆராய முன் சுமார் மூன்று நிமிடங்களுக்கு இந்நாட்டின் தமிழர்களைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையுடன் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் எம்முள் பலருக்கு இலங்கைத் தமிழரின் வரலாறு பற்றி அதிகம் தெரியாது. சிங்கள மக்களைப் போல மகாவம்சக் கதைகளையே அவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கையின் தமிழ்பேசும் மக்களில் இலங்கைத் தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள். இங்குள்ள ஆதிவாசிகளான தமிழ்ப்பேசும் மக்களுடன் அந்தந்த காலகட்டத்தின் போது மேலதிகத் தமிழர்கள் இங்கு வந்து சேர்ந்துள்ளார்கள் என்பது தான் வரலாறு. நாம் பலதரப்பட்ட தமிழர்களின் வாரிசுகள்! பாண்டிய, பல்லவ, சோழ, சேர, ஆரிய சக்கரவர்த்திகள் போன்றோர் இங்கு வந்த போது அவர்கள் தம் மக்களையும் தம் நாட்டில் இருந்து கொண்டு வந்து இங்கு குடியேற்றினார்கள். கடைசியாக வந்தவர்களே பிரிட்டிஷார் இங்கு கொண்டு வந்த எமது மலையக சகோதர சகோதரிகள். மதத்தால் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், பெரும்பான்மை கிழக்கிலங்கை முஸ்லீம்களும் தென்னிந்தியாவின் குறிப்பிட்ட இடங்களில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களே. அவர்களின் அழகு தமிழ்ப் பேச்சுவழக்கு அதனை ருசுப்படுத்துகின்றது.
ஆதித்தமிழர்கள் குமரிக்கண்ட மக்களின் வழித்தோன்றல்கள் என்று கூறப்பட ;டாலும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இரும்புக் காலப் பண்பாடு இலங்கையில்
அறிமுகப்படுத்தப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்கள் இதுவரையில் கணித்துள்ளார்கள். கீழடி அகழ்வுகள் எமது சரித்திர அறிவை மாற்றியது போல் இந்து சமுத்திர ஆழ்கடல் ஆராய்ச்சிகள் குமரிக்கண்ட நாகரிகம் பற்றி ஒரு நாள் பறைசாற்றுவன. அப்போது எமது சரித்திரப் பார்வை வேறுபடும். எனினும் தற்போதைய சரித்திரக் கணிப்பைப் பார்ப்போம்.
தலைசிறந்த இந்திய வரலாற்றாசிரியரான விமலா பேக்லே அவர்கள் யாழ் குடாநாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் நாட்டின் தெற்கில் வாழும் தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புகளையும், ஒத்தியல்புகளையும் கொண்டிருந்தார்கள் என்று கூறியுள்ளார். கலாசார ரீதியாக புத்தளத்தில் இருக்கும் பொம்பரிப்புக்கும் சுண்ணாகம் - கந்தரோடைக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடித்த அகழ்வுகளும் ஒரே மாதிரி காணப்பட்டுள்ளன. இதனைப் பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்ன, பேராசிரியர் இந்திரபாலா போன்றவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அந்த அகழ்வுகளுள் சவ அடக்க தாழிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாழி சவ அடக்க முறை மூன்று இடங்களிலும் பின்பற்றியமை தெரிய வந்துள்ளது. மட்பாண்டத்தில் செய்யப்பட்ட பெரிய தாழிகளில் இறந்தவர் ஒருவருடைய உடலையோ, சாம்பலையோ அவற்றில் இட்டு இறந்தவர் பாவித்த முக்கியமான உபகரணங்களையும் அதனுள் போட்டு நிலத்தில் அடக்கம் செய்யும் முறையே தாழி சவ அடக்கமுறை. வட கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இத் தாழிகள் பல அண்மைக் காலங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் ஆதிவாசிகள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து தற்போது கைவிடப்பட்டுள்ளது. விஜயனும் அவரின் 700 சகாக்களும் வட இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கு வந்தார்கள் என்பதற்கு எந்தவித சான்றுகளும் இந்திய மாநிலங்கள் எவற்றிலும் இல்லை. மகாவம்சத்தை எழுதிய மகாநாம என்ற பிக்குவின் கற்பனையில் பிறந ;தவர்களே மேற்படி விஜயனும் அவனின் சகாக்களும். பௌத்த மத விருத்திக்காக எழுதப்பட்ட கற்பனைக் கதையே மகாவம்சம்.
பல வருட காலமாக ஆதியில் இருந்து அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து எமது தமிழ் மக்களும் சிங்களவர்களும் இந்நாட்டில் சமகாலத்தில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்ற பிழையான கருத்தை எம் மக்கள் கொண்டிருந்திருக்கின்கிறார்கள்.
கி.பி 5ம் நூற்றாண்டில் அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவம்சம் என்ற நூல் பாளிமொழியில் வெளிவந்த போது சிங்களவர் என்ற ஒரு இனமே அப்பொழுது உருவாகவில்லை. சிங்களமொழி பாவனைக்கு வந்தது கி.பி 6ம் மற்றும் 7ம் நூற்றாண்டு அளவில் தான். சிங்களமொழியின் முதல் இலக்கண நூலான ´சிதத் சங்கராவ´ கி.பி 13வது நூற்றாண்டில்த்தான் வெளிவந்தது. 2000 வருடங்களுக்கு முன்னர் சிங்களமொழி இருந்திருந்தால் ஏன் அவர்களின் இலக்கணநூல் 700 ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெளிவந்திருக்க வேண்டும்? சிங்களம் என்பது மிக அண்மையமொழி. தமிழ், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளினதும் கிராமிய பாரம்பரிய மொழிகளினதும் சேர்க்கையே சிங்களமொழி. வேண்டுமென்றே சிங்களமொழியினதும் சிங்களவர்களினதும் வரலாறு திரிபுபடுத்தி கூறப்பட்டு வந்துள்ளது.
வரலாற்று ரீதியாகவும் DNA சோதனைகள் மூலமாகவும் தற்போது அறிந்து கொள்ளப்பட்டிருக்கும் வரலாற்று உண்மை என்னவென்றால் சிங்களவரின் மூதாதையர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வரவில்லை. ஆரியர் வருகை என்பது கட்டுக்கதை. உள்நாட்டிலேயே ஆதியில் இருந்து வந்த மக்கள் தான் தமிழர்களதும் சிங்களவர்களதும் மூதாதையர்கள் என்பது இன்று சரித்திர ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இரு இனங்களும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாற்று ரீதியாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்த காலம் இற்றைக்கு 3000 வருடங்களில் இருந்து இற்றை வரையிலாகும். எமது மூதாதையர்களில் சிலர் சிங்கள மக்களாக மாறியது சிங்களமொழி நடைமுறைக்கு வந்த கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளிலாகும். பின்னர் வந்த இனம் இன்று பாராளுமன்றத்தில் முதன்மை இனமாக மாறியுள்ளது.
எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருக்க மற்றைய மாகாணங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள். ஆகவே தமிழ்ப் பேசும் வட கிழக்கு மாகாணம் ஒரு அலகாகவும் மற்றைய மாகாணங்கள் இன்னொரு அலகாகவும் மொழிவாரியாகக் காணப்பட்டன. எனவே நாடு பிரித்தானியரால் அவ்வாறே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மொழிவாரியாகப் பிரித்துப் பார்த்திருந்தால் சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு கட்டாயமாகத் தரப்பட்டிருக்கும். ஏனென்றால் கண்டியர்கள் கூட சமஷ்டியையே விரும்பினார்கள். அவ்வாறு இலங்கைக்குச் சமஷ்டி வராது செய்தவர்தான் இலங்கை தேசத்தின் தந்தை என்று சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டுவரும் டி.எஸ்.சேனநாயக்க அவர்கள். அவரே இலங்கையின் முதல் பிரதம மந்திரியானார். ஆனால் அவர் தனது திருகுதாளங்களை சுதந்திரம் கிடைக்க முன்னரே தொடங்கியிருந்தார். தமிழ் மக்களுக்கு எதிரான முதல் சதி அவராலும் பின்னர் ஆளுநர் நாயகமாக பதவி வகித்த சேர். ஒலிவர் குணதிலகவாலுமே தான் இயற்றப்பட்டது. அவர்கள் இருவரும் எப்படியாவது இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக ஆங்கிலேயர்களால் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற திடமான நினைப்பில் இருந்தார்கள். அதனால்தான் 1943ல் பிரித்தானியா கூடிய அதிகாரங்களை இலங்கைக்கு வழங்க இருப்பதாக அறிவித்த பின் சேர் ஜவர் ஜெனிங்க்ஸ் என்ற அரசியல் யாப்பு சட்ட நிபுணருடன் சேர்ந்து இலங்கையின் சிறுபான்மையினர் எவருடனும் கலந்தாலோசியாது ஒரு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு வரைவை இலங்கைக்கெனத் தயாரித்து பிரித்தானிய கொலனி ஆதிக்க அரசிற்கு அவசர அவசரமாக கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.
அப்படியிருந்தும் கொலனி அரசாங்கம் சிறுபான்மையினரை கலந்தாலோசியாது தமக்கு தரப்பட்ட வரைபை ஏற்காது சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை இங்கு அனுப்ப ஆயத்தமானார்கள். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற சேனநாயக்காவும் குணதிலகாவும் இரண்டாவது சதியில் இறங்கினார்கள். இலண்டன் சென்று ஆணையாளர்களைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் ஈர்ப்பதே அந்தச்சதி. ஆணையாளர்கள் இங்கு வருமுன் சேர் ஒலிவர் குணதிலக இலண்டன் சென்று ஒலிவர் ஸ்டன்லி என்ற பிரித்தானிய மாநில செயலாளரைச் சந்தித்து அவருக்கூடாக சோல்பரி பிரபுவைச் சந்தித்து தமது வரைவே இலங்கைக்குச் சிறந்தது என்ற கருத்தை முன்கூட்டியே ஆணைக்குழுத் தலைவரின் மனத்தில் ஆழப்பதியப் பண்ணினார்.
இவ்வளவையும் மறைமுகமாகச் செய்துவிட்டு இருவரும் மூன்றாவது சதியில் இறங்கினார்கள். 22.12.1944 இல் சோல்பரி ஆணைக்குழுவினர் இங்கு வந்தபோது டி.எஸ். சேனநாயக்கா ´இந்த ஆணைக்குழு எமக்கு வேண்டாம்´ என்ற ஸ்லோகத்தை எழுப்பி அதிகாரபூர்வமாக ஆணைக்குழுவை பகிஷ்கரித்தார். இதன் காரணம் கண்டியர்களாலும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்றவர்களாலும் தமிழர்களாலும் சமஷ்டி முறை பற்றி சமர்ப்பணங்கள் எழலாம் என்பதால். அவ்வாறான சமர்ப்பணங்களைத் தடுக்கவே இவ்வாறு செய்தார். ஆகவே கண்டியர்களும் பண்டாரநாயக்கவும் பொன்னம்பலமும் சமஷ்டியை முன்வைக்க முன் பகிஷ்கரிப்பின் மூலமாக அவர்களின் வாய்களை டி.எஸ்.சேனநாயக்க அடைத்துவிட்டார். இவ்வளவுக்கும் ஏற்கனவே தமது வரைவை ஆணையாளர்கள் ஏற்கவேண்டும் என்பதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை டி.எஸ்.சேனநாயக்கவும் சேர் ஒலிவரும் சேர்ந்து செய்த பின்னர் தான் பகிஷ்கரிப்பு நடந்தது. சமஷ்டியை ஆதரிக்கவேண்டிய ஜி.ஜி.பொன்னம்பலம் தன் கெட்டித்தனத்தை வெளிக்கொண்டு வருவதுபோல் 50 க்கு 50ஜ முன்வைத்தார்.
அவர் சமஷ்டியை முன்வைத்திருக்கலாம். ஆனால் அவரின் 50க்கு 50ஐ ஆணைக்குழு நிராகரித்தது. ஒற்றையாட்சி முறையை ஆதரித்து தமது அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். சேனநாயக்க மீனுக்கு வாலையும் பாம்புக்குத் தலையையும் காட்டி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டார்.
சேர் ஐவோர் ஜெனிங்ஸ் ஒருமுக்கிய கருத்தை அப்போது வெளியிட்டிருந்தார்- ´சோல்பரி ஆணையாளர்களின் சிபார்சு என்று புதிய அரசியல் யாப்பு வரைவு அழைக்கப்பட்டாலும் உண்மையில் திரு.சேனநாயக்காவின் வரைவே அது´ என்றார். ´செனட் சபை மட்டுந்தான் ஆணையாளர்களின் சிபார்சு´ என்று கூறினர். (ஹுலுகல்ல 2014 ல் எழுதிய நூலின் 177ம் பக்கத்தில் இவையாவும் கூறப்பட்டுள்ளன. திரு.செல்வேந்திரா சபாரட்ணம் அவர்களால் விரைவில் வெளியிடப்படப் போகும் நூலிலும் இவை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன.) ஆகவே, பாராளுமன்றத்தின் வகிபாகம் என்று நாங்கள் ஆராயும் போது அதன் பின்னணியில் நடைபெற்ற பல திருகுதாளங்களை நாங்கள் மனதில் வைத்தே இக் கருப்பொருளை நோக்கவேண்டும்.
பாராளுமன்றத்தின் வகிபாகம் பற்றிப் பார்க்கும் போது 1972ம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் இயற்றப்படும் வரையில் பாராளுமன்றமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 1948ம் ஆண்டின் அரசியல் யாப்பு தனது உறுப்புரை 29(2)ன் மூலமாக சிறுபான்மையினரின் உரித்துக்களை ஓரளவு பாதுகாக்க எத்தனித்தது. ஆகவே சிங்கள பெரும்பான்மையினரின் ஆதிக்க நடவடிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டி பெரும்பான்மையினரை ஓரளவு பின்வாங்கச் செய்யக் கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் ´சிங்களம் மட்டும்´ சட்டம் உறுப்புரை 29 (2) ன் ஏற்பாடுகளுக்கு முரணாக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தாலும் தொடர்ந்து பாராளுமன்றமே தமிழ் மக்களின் உரித்துக்களுக்கான போராட்டத் தளமாக தொடர்ந்து இருந்து வந்தது.
அடுத்த காரணம் 1972 வரையில் கூட பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியே கோலோச்சி வந்தது. அதன் காரணத்தினால் சகல இன மக்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே பேசியதால் உடனுக்குடன் இரு தரப்பாரின் கருத்துக்களும் மற்றையவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கருத்துப் பரிமாற்றங்கள் மூன்றாம் நபரான மொழி பெயர்ப்பாளர் உதவியின்றி நேரடியாக நடைபெற்றன. 1972ம் ஆண்டின் முதல் குடியரசு அரசியல் யாப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெளிநடப்பு செய்தனர். அப்பொழுதிருந்து பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் ஒரு அரசியல் பேசும் தக்க புகலிடமாகத் தென்படவில்லை. சிங்கள ஆதிக்கம் பெருகியது. அதே நேரம் காணி உச்ச வரம்புச் சட்டம், வீடுகள் உச்ச வரம்புச் சட்டம் ஆகியன 1972ம் ஆண்டின் பின்னர் வெளிவந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே 1972ன் பின்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றமானது வெறும் அரசியல் பேசும் அரங்கமாகவே அமைந்தது. ஆனால் அவர்கள் பேச்சுக்கள் சிங்கள மக்களைப் போய் அடையவில்லை. இதற்குக் காரணம் எமது பாராளுமன்றமானது பெரும்பான்மையினரது அடாவடித்தனத்துக்குத் துணை போக சம்மதித்தமையே. ஜனநாயக முறைமைகள் பேணப்படவில்லை. சிறுபான்மையினரின் கருத்துக்கள் பொருட்படுத்தப்படவில்லை. அத்துடன் சிங்கள ஊடகங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தமது ஊடகங்களில் வெளியிடப் பின்நின்றனர். அவர்களின் ஆங்கிலப் பேச்சுக்கள் கூட கொழும்பு ஊடகங்களில் வெளிவருவது மிக அரிதாகவே இருந்தன. இதனால் தமிழ்ப்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் சிங்கள மக்களைச் சென்றடையவில்லை. எவ்வளவு தான் உண்மைகளைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தாலும் அவை சிங்கள மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. தமிழர்கள் யாவரும் பயங்கரவாதிகளே என்ற எண்ணந்தான் சிங்கள மக்களிடையே மேலோங்கியது. இதனால் தமிழ் மக்களின் உண்மை நிலை பாராளுமன்றத்தினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு முறை சிங்கள ஊடகத்தின் கேள்விக்கு சிங்களத்தில் பதில் அளித்தேன். அப்போது அந்த சிங்கள ஊடகவியாளர் உங்கள் உறுப்பினர்கள் இது பற்றி எதுவுமே கூறவில்லையே என்றார். அப்போது நான் கூறினேன் ´நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறிக்கொண்டு தான் இருக்கின்றோம். உங்களுக்குத்தான் விளங்கவில்லை´ என்றேன்.
ஆனால் 1972ன் முன்னர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசியவை பொதுமக்களைப் போய் அடைந்தன. இன்றோ ஆங்கிலத்தில் பேசினாலும் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை. தமிழில்ப் பேசினாலும் எமது கருத்துக்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களை அடைவதில்லை.
இந்த கால கட்டத்தில்த் தான் தமிழ் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினர். பாராளுமன்றத்தில் எத்தகைய அறிவுக் கூர்மைசார் பேச்சுக்களை நிகழ்த்தினாலும் அவற்றால் பயன் ஏதும் புலப்படவில்லை என்று கண்டு வன்முறையை விடுதலை ஆயுதமாக்கினர்.
2009ல் இளைஞர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்படும் வரை தமிழ்ஈழத் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தின் வகிபாகம் மிகக் குறைந்தே காணப்பட ;டது. எனினும் தமிழ்ப் பிரதிநிதிகள் 22 பேர் அப்போது இருந்துங்கூட அவர்களால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் போர் நடந்துகொண்டிருந்தமையே.
2009ம் ஆண்டின் பின்னரான பாராளுமன்றத்தை எடுத்துப் பார்த்தோமானால் பாராளுமன்ற தமிழ் சிங்கள உறுப்பினர்களுக்கிடையேயான இடைவெளி நீண்டு கொண்டு செல்வதை அவதானிக்கலாம். மலையகத் தமிழர்கள் சிலர் சிங்களத்தில் பேசுவதை சிங்கள உறுப்பினர்கள் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் தமிழில் பேசுவோரின் பேச்சின் மொழிப் பெயர்ப்பைக்கூட கேட்கும் பொறுமை சிங்கள உறுப்பினர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.
அடுத்து தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் தொகை குறைந்து வருகின்றது. அரசாங்கம் தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலம் கூட பல சிங்கள உறுப்பினர்களுக்கு புரிவதில்லை. ஆகவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறைந்து கொண்டே செல்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஆர்ப்பாட்டங்கள், காணி அபகரிப்பை எதிர்க்கும் கிராமத்தவரின் எதிர்ப்புப் போராட்டங்கள், மீனவர்களின் போராட்டங்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போன்றன மக்கள் தாங்களே களத்தில் முன் நின்று போராட வேண்டிய அத்தியாவசியத்தை அவரகளுக்கு உணர்த்தியுள்ளன.
மக்கட் தலைவர்களும் இதையுணர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து கொண்டே சர்வதேச ரீதியாக எவ்வாறு தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என்பது பற்றி சிந்தித்து செயலாற்றி வருகின்றார்கள். பாராளுமன்றத்தின் வகிபாகத்தை ஆராயும் போது ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது ஒற்றையாட்சியின் கீழ் நாம் கோருவது சமஷ;டி அல்லது இணைப்பாட் சியையே! ஒற்றையாட்சி முறையைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் ஒரு போதும் அதன் இறுக்கத்தைத் தளரவிட முன்வரமாட்டார்கள். சமஷ்டி என்பது அந்த இறுக்கப் பிடியைத் தளரச் செய்வது. பாராளுமன்றத்தில் 2 3 பங்கு சிங்களப் பிரதிநிதித்துவம் இருக்கும் போது சிங்கள மக்களின் அளுங்குப் பிடிக்குப் பாதிப்பு ஏற்படும் வண்ணம் எதனையும் செய்ய சிங்களப் பிரதிநிதிகள் எவரும் முன்வரமாட்டார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு உதாரணம் கூறுகின்றேன். பேரூந்தில் பயணம் செய்யும் போது பெண்களுக்கென்று சில ஆசனங்கள் அவற்றில் ஒதுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த ஆசனங்களில் ஆண்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கேட்டால் ´இப்பொழுது தானே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை தந்தாகிவிட்டதே. பின் எதற்கு உங்களுக்கு பிரத்தியேக ஆசனங்கள்´ என்று கூறி இருக்கைகளைத் தர மறுக்கின்றார்கள் ஆண்கள். வாகன சாரதி, கண்டக்டர் யாவருமே ஆண்கள். அவர்களும் சம உரிமை பற்றிக் கூறி எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கின்றார்கள். ஆகவே அங்குள்ள பெரும்பான்மையினரான ஆண்களிடம் பேசிப் பயனில்லை. வேறு வழிமுறைகளையே பெண்கள் கையாள வேண்டும்.
நான் என்ன கூற வருகின்றேன் என்றால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரமும் பலமும் கொண்டவர்கள் இணைப்பாட்சிக்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆகவே தான் சர்வதேச கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் நெருக்குதல்களை ஒற்றையாட்சியின் மீது ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. இதை உணர்ந்து தான் முதலமைச்சர் என்ற எனது பதவியைப் பயன்படுத்தி இங்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலர்களுக்கும் எமது நிலை பற்றிய விரிவான விபரங்களையும் புள்ளி விபரங்களையும் என் பதவியின் போது தந்துதவினேன். அப்போதைய செயலாளர் நாயகம் ஹுசெயின் அவர்கள் எமது ஆவணங்களைப் பரிசீலித்ததின் பலனாக எமக்கு சாதகமான கருத்துக்களை அக்காலகட்டத்தில் எடுத்தியம்பினார். சர்வதேச ரீதியாக நாங்கள் எமது அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு சார்பான ஏதுவாக அமைகின்றது. அன்றாடப் பிரச்சனைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால் தமிழீழத் தமிழர்களின் அரசியல் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம் தற்போது மிகவும் வேதனைக்குரிய அவல நிலையையே அடைந்துள்ளது.
அத்துடன் இன்னுமொரு விடயம் ஆராயப்பட வேண்டியுள்ளது. வெளிநாடொன்றுடன் 13வது திருத்தச்சட்டம் பற்றிப் பேசி எமது ஆறு கட்சிகளும் துரோகம் இழைத்துவிட்டன என்று ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்கள் கோரிக்கைகளுக்கு இடமளிக்கும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியமையே. இவர்களின் அரசியல் அப்பாவித்தனம் இதில் இருந்து புலப்படுகின்றது. புதிய அரசியல் யாப்பானது அதிகார மையத்தை மாகாணத்தில் இருந்து மாவட்டத்திற்கு மாற்ற இருக்கின்றது. மாவட்டங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை உண்டுபண்ணி ´பார்த்தீர்களா! உங்கள் கிராமங்கள்,மாவட்டங்கள் இனித் தம்மைத்தாமே ஆளப் போகின்றன´ என்று கூறப் போகின்றார்கள். வட கிழக்கு இணைப்பு, மாகாண அரசாங்கம் அல்லது அரசாங்கங்கள் என்பவற்றைத் தாண்டி மத்தியின் கைப்பொம்மைகளாக மாவட்டங்களை ஆக்கவிருக்கின்றார்கள். எம்மைக் குறை கூறுவோர் இலவு காத்த கிளிகளாக மாறப் போகின்றார்கள். புதிய அரசியல்யாப்பு எமது மாகாணசபை முறைமையை அடியோடு அழித்து இந்தியாவின் தலையீட்டையும் அண்டவிடாமல் செய்துவிடும். இதை உணர்ந்து எம்மைக் குறைகூறுவோர் விழித்துக் கொள்ள வேண்டும். பதின்மூன்றுக்குப் பதில் மாவட்ட அரசாங்கமே வரவிருக்கின்றது. மாவட்டங்கள் மத்தியின் அதிகாரத்தினுள் சிறைப்பட்டிருப்பன.
நாங்கள் எங்கள் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் பார்க்க அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்களின் நேரடி நடவடிக்கைகளே வலுச் சேர்க்கக்கூடும். இனிவருங்காலத்தில் பாராளுமன்றத்தில் பேசுவதால் விளையும் நன்மை மிகக் குறைவே. ஆனால் மக்களுக்குப் பிழையான அரசியல் அறிவைப் புகட்டக்கூடாது. ஆகவே பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை நாம் உருவாக்காவிட்டால்!