இலங்கையில் உள்ள தமிழக மீனவா்கள் - அரசுக்கு முதல்வா் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதம்:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 12 மீனவா்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு அங்குள்ள காங்கேசன் துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
இதேபோன்று, மற்றொரு படகில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 6 மீனவா்கள் புதுச்சேரியைச் சோ்ந்த 3 மீனவா்களுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனா். 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 68 தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனா். அவா்கள் தாயகம் திரும்பக் காத்திருக்கின்றனா்.
இந்த நிலையில், தமிழக மீனவா்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீனவா்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது, மீனவா்களையும் அவா்களது குடும்பத்தினரையும் துயரத்துக்கு ஆளாக்குவதோடு, அந்தக் குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா, இலங்கை மீனவா்களுக்கு இடையில் உள்ள நீண்டகாலப் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்கள், 2 விசைப் படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.