’13க்கு ஆதரவாகவும் எதிராகவும்’! நிலாந்தன்.
13வது திருத்தம் எனப்படுவது தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதாவது தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் விளைவே அது. இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளின் திரட்டப்பட்ட விளைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து அதற்கு எதிராக இரத்தம் சிந்தியது. அதேசமயம் 13ஆவது திருத்தத்தை ஆதரித்து ஈபிஆர்எல்எஃப் இயக்கமும் ஏனைய இயக்கங்களும் ரத்தம் சிந்தின.
மொத்தத்தில் 13ஐ உருவாக்குவதற்காகவும் ஈழத்தமிழர்கள் இரத்தம் சிந்தினார்கள்.13ஐ ஆதரிப்பதற்காகவும் இரத்தம் சிந்தினார்கள். எதிர்ப்பதற்காகவும் ரத்தம் சிந்தினார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னரும் இப்பொழுதும் ஈழத் தமிழர்கள் 13 சரியா? பிழையா?, 13 வேண்டுமா? வேண்டாமா ?,13 தொடக்கமா? முடிவா? என்று ஆளுக்காள் மோதிக் கொண்டிருக்கிறார்களா? தீர்வு அல்லாத ஒரு தீர்வுக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் 34 ஆண்டுகளாக ரத்தம் சிந்தியும் தனக்குள் இரண்டுபட்டும் மோதிக் கொண்டிருக்கிறதா?
முதலாவதாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியா ஏன் 13வது திருத்தத்தை 34 ஆண்டுகளாக பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது? கடந்த 34 ஆண்டு காலத்தில் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள், பிராந்தியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழ் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு இந்தியா 13வது திருத்தத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
13வது திருத்தம் உருவாக்கியபோது கெடுபிடிப்போர் இருந்தது. அப்போது இந்தியாவும் அமெரிக்காவும் பகைவர். அப்பொழுது சீனா என்ற பிராந்திய பேரரசு ஒரு உலகப் பேரரசாக போட்டியிடும் நிலைமைகள் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள். சீனா பேரரசு போட்டிக்குள் இறங்கிவிட்டது.
அதுமட்டுமல்ல 13வது திருத்தம் உருவாக்கிய காலகட்டத்தில் இருந்த இந்திய சமஸ்டிக் கட்டமைப்பு கூட மாற்றங்களைக் கண்டுவிட்டது. ஒரு புலம்பெயர் செயற்பாடடாளர் சுட்டிக்காட்டியது போல, நரசிம்மராவ் பிரதமராக வந்த பின் இந்தியா திறந்த சந்தை பொருளாதாரத்துக்கு திறந்துவிடப்பட்டது.
இதன் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து கூட்டுத் தயாரிப்புகளில் ஈடுபடும் ஒரு நிலைமை ஏற்பட்டது. சுசுகி-மாருதி; ஹீரோ- கொண்டா போன்ற கூட்டுத் தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதன்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய மாநிலங்களில் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதி கேட்டார்கள்.இது நடைமுறையில் இந்திய மாநிலங்களின் பொருளாதாரத்தை கையாளும் அதிகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இது இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இருந்த நிலைமைகளை விடவும் புதியது.
எனவே கடந்த 34ஆண்டுகளில் இந்திய மாநிலக் கட்டமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பூகோள பிராந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த எல்லா மாற்றங்களையும் புறக்கணித்துவிட்டு இந்தியா 13ஆவது திருத்தத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நிற்கிறது.
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு முதலாவது காரணம், இந்திய இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் ஒரு பகுதி 13வது திருத்தம்தான். அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவுக்குள்ள உத்தியோகபூர்வமான பிடி 13வது திருத்தம்தான். எனவே இந்தியா அதை வலியுறுத்துகிறது.
இரண்டாவது காரணம், கொழும்பில் இருக்கும் அரசைத்தான் இந்தியா கையாண்டு வருகிறது. இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஐநா, சீனா போன்ற தரப்புகளும் அப்படித்தான்.அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு அது. அதன்படி இந்தியா கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் கையாண்டு வருகிறது.
அரசாங்கத்தைக் கையாள முடியாத போது தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு அரசாங்கத்தை பணிய வைக்கின்றது. அதைத்தான் அமெரிக்காவும் செய்கிறது. ஐநாவும் செய்கிறது. எனவே இலங்கை அரசாங்கத்தை கையாள்வதுதான் இந்தியாவின் பிரதான அணுகுமுறை என்று பார்த்தால், இலங்கை இனப் பிரச்சினையில் அரசாங்கத்தை பகைக்காத ஒரு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ச்சியாக எடுத்துவருகிறது.
இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13-வது திருத்தத்தை ஒரு தீர்வாக வலியுறுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தோடு பகையற்ற ஒரு போக்கை தொடர்ந்து பேணிவருகிறது. இந்தியா அதுவல்லாத வேறு எந்த ஒரு தீர்வைச் சொன்னாலும் அது இந்திய–இலங்கை அரசுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு அடிப்படைகளில்தான் இந்தியா 13வது திருத்தத்தை தொடர்ச்சியாக ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான்,டெலோ இயக்கத்தின் முன்னெடுப்பில் 5 கட்சிகள் இணைந்து ஒரு கூட்டு ஆவணத்தை தயாரித்து அதை இந்திய பிரதமருக்கு அனுப்பிய முயற்சித்தன. இலங்கைத்தீவின் மீது இந்தியாவுக்கு உள்ள பிடி 13வது திருத்தம் என்ற அடிப்படையில் அவர்கள் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுக்க முற்பட்டார்கள்.அதன்மூலம் இந்தியாவையும் பொறுப்புக்கூற வைக்கலாம், இலங்கைத் தீவையும் பொறுப்புக்கூற வைக்கலாம். இலங்கைத்தீவு பொறுப்பு கூற மறுத்தால் இந்தியாவையும் இலங்கையையும் முரண்பட வைக்கலாம் என்று மேற்படி கட்சிகள் நம்பின.
எனினும் தமிழரசுக்கட்சி இந்த முயற்சியில் இணைந்தபின் கோரிக்கையின் வடிவம் மாற்றப்பட்டது. இந்திய இலங்கை உடன்படிக்கை என்ற விவகாரம் முன் நிறுத்தப்பட்டு 13வது திருத்தம் பின் தள்ளப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு ஆவணம் இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆவணத்தில் தமது உச்சபட்ச கோரிக்கை சமஸ்டிதான் என்பதனை ஆறு கட்சிகளும் விளக்கமாகக் கூறியுள்ளன.
அதுபோலவே 13வது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்பதனை அந்த ஆவணம் ஏற்றுக்கொள்கிறது. எனினும் ஓர் உச்சக்கட்டத் தீர்வை அடையும் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கு 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதில் உண்டு.
இம்முயற்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை. தொடக்கத்திலிருந்தே அது அந்த முயற்சியை எதிர்த்தது. இப்பொழுது கூட்டு ஆவணத்தை அனுப்பிய கட்சிகளுக்கு எதிராக இன்று கிட்டு பூங்காவில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையளவில் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்கள் வெளிநாடுகளை நோக்கி முன் வைக்கும் கோரிக்கைகள் உச்சமானவைகளாக இருக்க வேண்டும் என்றும் அக்கட்சி நம்புகின்றது.அந்த அடிப்படையில் 13வது திருத்தத்தை முன்வைக்கக் கூடாது என்று அக்கட்சி வாதிடுகிறது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரனுடன் உரையாடினேன்.இந்தியாவை நோக்கி ஓரு கூட்டு ஆவணத்தை அனுப்புவதை நீங்கள் ஏற்கவில்லையா? அல்லது அந்த ஆவணம் 13ஐ மையப்படுத்தியதாக இருப்பதை நீங்கள் ஏற்கவில்லையா? என்று கேட்டேன். அவர் இந்தியாவை அணுக வேண்டும், கையாள வேண்டும் என்பதில் தமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக தமது கட்சி போகாது.ஆனால் அதற்காக 13 ஆவது திருத்தத்தை இந்தியா ஈழத் தமிழர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.என்று சொன்னார்.
அப்படியென்றால் இன்று நடக்கும் போராட்டம் 13 க்கும் 13ஐ வலியுறுத்தும் கட்சிகளுக்கும் எதிரானதுதான். இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்பதனை உங்கள் கட்சி தெளிவாக வெளிப்படுத்திருக்கிறதா ? என்று கேட்டேன். அதை நாம் வெளிப்படுத்துவோம் என்று அவர் சொன்னார்.
இங்கே கூட்டி கழித்து பார்த்தால் ஒரு விடயம் தெரிகிறது. இந்தியாவை அணுக வேண்டும் என்பதில் தமிழ்க் கட்சிகள் மத்தியில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. எப்படி அணுக வேண்டும். எதன்மூலம் அணுக வேண்டும் என்பதில்தான் அவர்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.இந்த முயற்சியை முன்னெடுத்த தொடக்கத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கையாக காணப்பட்டது.
ஆனால் தமிழரசுக் கட்சி அதில் நுழைந்ததும் கோரிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் எதுவிதத்திலாவது இணைத்திருந்தால் கோரிக்கை வேறு ஒரு வடிவத்தை அடைந்திருக்கும்.அது முழுமையான ஒரு கூட்டு கோரிக்கையாகவும் அமைந்திருக்கும்.
தமிழரசுக் கட்சி இக் கூட்டு முயற்சியில் இணைய மறுத்த பொழுது கூறிய காரணமும் ஏறக்குறைய மக்கள் முன்னணி கூறும் காரணத்தை ஒத்ததுதான். அதாவது 13ஐ ஒரு கோரிக்கையாக வைக்க முடியாது என்பதே.
எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது இந்தியாவை அணுகுவதற்கான ஒரு கூட்டுக் கோரிக்கை எதுவாக அமையவேண்டும் என்பதில்தான் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இந்த முரண்பாடுகளின் மீது கட்சிகளுக்கு இடையில் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளும் பிரதிபலிப்பதன் காரணமாக இந்தியாவைக் கையாள்வது என்ற வெளியுறவு அணுகுமுறையானது கட்சிகளுக்கிடையிலான போட்டிகளுக்கும் சிக்கிவிட்டது.
இப்பொழுது பெரும்பாலான கட்சிகள் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன. ஒரு கட்சி மட்டும் கோரிக்கைக்கு எதிராக காணப்படுறது மட்டுமில்லாது அக்கட்சியின் நடவடிக்கைகள் இந்தியாவை நோக்கியும் போகக்கூடாது என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
இது தமிழ் மக்கள் ஒரு தேசமாக முடிவெடுப்பதில் ஏற்பட்ட ஒரு பின்னடைவு. அதேசமயம் ஜனநாயகத்தில் எல்லாக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றில்லை. இரு வேறு நிலைப்பாடுகள் தமிழ்த்திரட்சியை உடைக்க கூடியவை என்பது உண்மைதான்.
அதேசமயம் முன்னணியின் எதிர்ப்பைக் காட்டி ஏனைய கட்சிகள் இந்தியாவோடு தமது பேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். முன்னணி எதிர்க்கிறது என்பதைக் காட்டியே 13ஐத் தாண்டிய ஒரு சமஸ்ரித் தீர்வை விடாப்பிடியாக கேட்கமுடியும்.
இந்த விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளுக்கும் எதிர்மறை அர்த்தத்தில் உதவி புரிந்திருக்கிறது என்பதே அதன் தர்க்கபூர்வ விளைவு ஆகும். அதை தீர்க்கதரிசனமாக பயன்படுத்தி மேற்படி கட்சிகள் தமிழ் மக்களுக்கு பின்வரும் விடயங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
முதலாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுவதுபோல தாங்கள் ஒற்றையாட்சிக்குள் ஈழத்தமிழர்களின் இறுதித் தீர்வை முடக்கவில்லை என்பது.
இரண்டாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டுவது போல தாங்கள் இந்தியாவின் கைக்கூலிகளாக நின்று இந்தியாவை அணுகவில்லை என்பது.
மூன்றாவது, ஈழத் தமிழர்களின் அரசியலை இந்தியா, கொழும்பிலுள்ள அரசாங்கத்துக்கூடாகவே அணுகி வந்த ஒரு நடைமுறையை வெற்றிகரமாக மாற்றி இந்தியாவை இனப்பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக தலையிட வைக்க முடிந்தது என்பது.