Breaking News

ஜோகன்னஸ்பர்க்கில் சாதனையை பதிவு செய்ய இருக்கும் விராட் கோலி!

 


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார். இருந்தாலும் கடந்த 2019-ல் ஆண்டில் இருந்து சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

தற்போது தென்ஆப்பிரிக்காவில் இந்திய டெஸ்ட் அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்கள் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவினர்.

விராட் கோலி, புஜாரா, ரகானே போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். விராட் கோலி சிறப்பான வகையில் ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் வழக்கும்போல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் 2-வது டெஸ்ட் நாளை ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குறிது. விராட் கோலிக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானது. இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். இதனால் சதத்திற்கான வறட்சியை இந்த போட்டியுடன் முடிவுக்கு  கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும், இந்த மைதானத்தில் விராட் கோலி 310 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து வீரர் ஜான் ரெய்டு 316 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி இன்னும் 7 ரன்கள் அடித்தால், ஜோகன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ரிக்கி பாண்டிங் 263 ரன்களும், ராகுல் டிராவிட் 262 ரன்களும், டேமின்மார்ட்டின் 255 ரன்களும் அடித்துள்ளார்.