Breaking News

18 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மொஹமட் ஹபீஸ்!



 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.

எனினும், 41 வயதான மொஹமட் ஹபீஸ், தொடர்ந்தும் முன்னணி ரி-20 லீக் தொடர்களில் விளையாடுவார் என அறிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹபீஸ், தனது கடைசி சர்வதேச போட்டியை அவுஸ்ரேலியாவுக்கு எதிராக ரி-20 உலகக் கிண்ண அரையிறுதியில் விளையாடினார்.

முன்னதாக, ஹபீஸ் டிசம்பர் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு ரி-20 உலகக் கிண்ண தொடருக்குப் பிறகு அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

அவர் இறுதியாக லோர்ட்ஸில் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

2012ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற ஹபீஸ், 2014ஆம் ஆண்டு குழுநிலையுடனே வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கினார்.

அவர் ரி-20 கிரிக்கெட் அணித்தலைவராக 29 போட்டிகளில் தலைமை தாங்கி 11 தோல்விகளுடன் 18 வெற்றிகளுக்கு அணியை அழைத்துச் சென்றார்.

மொஹமட் ஹபீஸ், இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம், 10 சதங்கள் 12 அரைசதங்கள் அடங்களாக 3,652 ஓட்டங்களை குவித்துள்ளார். சராசரி 37.65ஆகும். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 224ஆகும்.

அத்துடன் இதுவரை 218 ஓருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹபீஸ், 38 அரைசதங்கள், 11 சதங்கள் அடங்களாக 6,614 ஓட்டங்களை குவித்துள்ளார். சராசரி 32.91ஆம். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 140 ஆகும்.

இதுதவிர 119 ரி-20 போட்டிகளில் விளையாடி 14 அரைசதங்கள் அடங்களாக, 2,514 ஓட்டங்களை குவித்துள்ளார். சராசரி 26.46 ஆகும். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 99ஆகும்.