Breaking News

ஆப்பிரிக்க நாடுகளை புரட்டிப்போட்ட அனா புயல்: 77 பேர் பலி!

 


ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளை அனா என்கிற வெப்ப மண்டல புயல் கடுமையாக தாக்கியது.

இந்த புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த பேய்மழையால் 3 நாடுகளில் பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. இவை அங்கு எண்ணற்ற நகரங்களை முற்றிலுமாக உருக்குலைத்துவிட்டன.

தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.

மலாவி நாட்டில் புயல், மழை வெள்ளத்தால் 11 பேர் இறந்தனர். அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் பேரழிவு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் இன்றி புயலின் தாக்கத்தால் மலாவி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் மொசாம்பிக்கில் அனா புயலால் 18 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் வெள்ளத்தில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், டஜன் கணக்கான பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை இடிந்து தரைமட்டமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.