Breaking News

அடுத்த முறையாவது பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் – சாணக்கியன்


 

பொங்கலை அடுத்த முறையாவது நாங்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறையில் அம்பிலாளந்துறை திசைகாட்டி மையம் நடாத்திய பொங்கல் விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “பெரும்பாலான மக்களுக்கு பொங்கலானது இந்தவருடம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். நாளைய தினம் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பால் கறுப்புப் பொங்கல் என்ற தலைப்பிலே பொங்கல் நிகழ்வொன்றை பதுளை வீதியிலே செய்யவிருக்கின்றோம். பட்டிப்பளை பிரதேசத்தின் நிலைமை மோசமானதாக இருக்கின்றது. ஒருசிலரினால் இரண்டு ஆட்டுக்குட்டிகளை கொடுத்து மக்களை திசைதிருப்புகின்ற செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு சிலரினால் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற செயல்களை காணமுடிகின்றது. மறுபக்கம் கெவிலியாமடு கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் காடுகளை பாதுகாக்க வேண்டிய இராஜாங்க அமைச்சர் அவர்களே தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத தன்னுடைய ஆதரவாளர்கள் 500 பேரை சிவில் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரிலே இங்கு கொண்டு வந்து தலா மூன்று ஏக்கர் காணிகளைக் கொடுத்து 500 பேரை இங்கு குடியமர்த்தியிருக்கின்றார். பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை பிரதேசத்திலே விளைச்சலானது வழமையானது போலவே இருக்கின்றது. அவர்களும் கூடியவிலை கொடுத்தே வாங்கினார்கள். ஆனால் எங்களுடைய பிரதேசத்தில் விஞ்ஞானம் இல்லாமல் போய்விட்டது. அதை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பசளை வேண்டும் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தோம். மாவட்ட செயலகத்தை முடக்குமளவிற்கு ட்ரக்டர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தன. ஆனால் எத்தனையோ விவசாயிகள் இங்கிருந்தும் பட்டிப்பளையிலிருந்து ஒரு ட்ரக்டர்கூட வரவில்லை. சிங்களவர்கள் போராடி எப்படியாவது பசளையை எடுப்பார்கள், அப்போது எங்களுக்கும் கிடைக்கும் என்ற மனநிலை எங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அடுத்த முறையாவது நாங்கள் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடவேண்டுமானால் முதலில் நாங்கள் விழிப்படைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.