புதிய ஆண்டைத் திட்டமிடுவது - நிலாந்தன் கட்டுரைகள் !
ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும்.எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம்.
கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் ஒப்பீட்டளவில் மூன்று முக்கிய நகர்வுகள் இடம்பெற்றன.முதலாவது- கடந்த மார்ச்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தன.இரண்டாவது-கடந்த செப்டம்பர்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கோரிக்கையை முன்வைத்தன. மூன்றாவதாக, அண்மை மாதங்களாக இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு ஒருங்கிணைப்பு முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் வேறு பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இம்மூன்று நகர்வுகளையும் குறிப்பாக கவனிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் இம்மூன்று நடவடிக்கைகளும் முதலாவதாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள்.இரண்டாவதாக வெளிவிவகார முன்னெடுப்புக்கள்.சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்றதையும் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் அது தனியோட்டம்,ஒருங்கிணைந்த முயற்சி அல்ல.
இனப்பிரச்சினை எனப்படுவது சாரம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினையே என்று அரசியல் அறிஞர்கள் கூறுவார்கள்.அதற்கு அனைத்துலக தீர்வுதான் உண்டு.அதன்படி பார்த்தால் அனைத்துலகத்தை கையாள்வதற்கு ஏதோ ஒரு பொறிமுறை வேண்டும். ஏதோ ஒரு வழி வரைபடம் வேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கொள்கையும் வெளிவிவகார கட்டமைப்பும் வேண்டும்.எனவே கடந்த ஆண்டில் ஜெனிவாவை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் கோரிக்கைகளை முன்வைக்கும் நடவடிக்கைகளை தொகுத்துப் பார்த்தால் அவை வெளிவிவகார நடவடிக்கைகள்தான். இந்த அடிப்படையில் இம்மூன்று வெளிவிவகார நடவடிக்கைகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம்
முதலாவது முயற்சி மன்னாரைச் சேர்ந்த தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தலைவர் சிவகரனால் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஏனைய சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.இது கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அடைவு. இக்கடிதம் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே தமிழ் மக்களின் பிரச்சினையை கொண்டு போக வேண்டும் என்ற மிகத் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. அம்முதலாவது கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் இரு கடிதங்களை அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.ஆனால் ஐநா தீர்மானத்தின் பூச்சியவரைபு வெளியிடப்பட்டதும் கூட்டமைப்பு மேற்கு நாடுகளுடன் இணைந்து தீர்மானத்தை இறுதியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.இதனால் ஒருங்கிணைப்பு முயற்சிகள் குலைந்தன.குறைந்தபட்சம் எனைய இரண்டு கட்சிகளையாவது ஒருங்கிணைக்கக்கூட முடியவில்லை.ஏனென்றால் 13வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியையும் ஒரே நிலைப்பாட்டிற்குக் கொண்டுவர முடியவில்லை.இது முதலாவது முயற்சி.
இரண்டாவது முயற்சி,கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரை யொட்டி ஐந்து கட்சிகள் அனுப்பிய கடிதம். இவ்வொருங்கிணைப்பு முயற்சியை டெலோ இயக்கம் முன்னெடுத்தது.தமிழரசுக் கட்சி அதை ஆதரிக்கவில்லை. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணையவில்லை.
மூன்றாவது முயற்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைப்பது.இதுவும் டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.இது முன்னைய ஒருங்கிணைப்பு முயற்சியின் அடுத்த கட்டம்.இந்த முயற்சியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை.தமிழரசுக்கட்சி தொடக்கத்தில் ஒத்துழைக்கவில்லை. எனினும் பின்னர் ஒத்துழைத்தது.இடையில் சுமந்திரன் தலைமையிலான ஓரணி அமெரிக்காவுக்கும் சென்றது.இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் முழு வெற்றி பெறவில்லை.
மேற்கண்ட மூன்று நடவடிக்கைகளையும் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் விடயங்களை தமிழ் மக்கள் கற்றுக் கொள்ளலாம்.
முதலாவது-மேற்கண்ட மூன்று ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கும் காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தமையும் மாற்று அணி மூன்று ஆசனங்களை பெற்றமையும்தான். தேர்தலில் தோற்ற மாவை சேனாதிராஜா கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்துவதற்காக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை முதலில் முன்னெடுத்தார்.அதைக் கூட்டமைப்பின் தலைமை ரசிக்கவில்லை.எனவே அந்த முயற்சிகள் தேங்கி நின்றன.அதன் அடுத்த கட்டமாக டெலோ அதை முன்னெடுத்தது.அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.கடந்த பொதுத் தேர்தலில் டெலோ இயக்கம் மூன்று ஆசனங்களை பெற்றதால் அது தன் பேரம் பேசும் சக்தி அதிகரித்திருப்பதாக கருதுகிறது.இது முதலாவது காரணம். கூட்டமைப்புக்குள் பங்காளிக் கட்சிகள் தொடர்ச்சியாக அவமதிக்கப்பட்டதால் அவை தமது முதன்மையை நிலைநாட்ட முற்படுகின்றன என்பது மற்றொரு காரணம்.மூன்றாவது காரணம் டெலோவின் பேச்சாளரான குருசாமி சுரேந்திரன்.எனவே மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகள் யாவற்றுக்கும் அடிப்படை காரணம் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் அரசியல் வலுச் சமநிலை மாறத்தொடங்கியதுதான்
இரண்டாவது கற்றுக் கொண்ட பாடம்- கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தாலும் மாற்று அணி ஒரு திரண்ட பலமாக மேலெழத் தவறிவிட்டது.கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருக்கிறது.அதுதான் மேற்கண்ட மூன்று வெளிவிவகார நடவடிக்கைகளிலும் தமிழரசுக்கட்சி தனியோட்டம் ஓடக் காரணம்.அது மட்டுமல்ல,கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு நகர்வாகிய சுமந்திரன் குழுவின் அமெரிக்க பயணத்துக்கும் அதுவே காரணம். கடந்த செப்டம்பர் மாத ஜெனிவா கூட்டத்தொடரையொட்டி தமிழரசுக் கட்சி தனியாக ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதம் என்று கிடைத்த உத்தியோகப்பற்றற்ற ஆவணம் ஒன்றின் முதல் பந்தியில் அது தெளிவாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஒரே தமிழ் கட்சியாகிய நாம் என்று அந்த முதல் பந்தி தொடங்குகிறது.
அதுதான் வெளிவிவகார நடைமுறையும் ஆகும். அரசியலில் வெளிவிவகாரம் எனப்படுவது இரண்டு அதிகார மையங்களுக்கு இடையிலான உறவுதான். உள்நாட்டில் தேர்தல் மூலம் ஒப்பீட்டளவில் அதிக மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சியோடுதான் வெளி அரசுகளும் நிறுவனங்களும் “என்கேஜ்” பண்ணும். நாட்டில் அதிகார மையமாக காணப்படும் கட்சிகள் அல்லது அதிகாரத்தின் மீது ஏதோ ஒரு விதத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சிவில் தரப்புக்கள் என்று கருதும் தரப்புக்களை நோக்கித்தான் வெளிநாட்டுத் தூதுவர்களும் வருவார்கள். வெளிவிவகார அணுகுமுறைகளில் அது ஒரு அடிப்படை விதி. தேர்தல் மூலம் அதிக மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சியோடுதான் வெளித் தரப்புக்கள் உறவாடும்.இந்த அடிப்படைதான் தமிழரசுக் கட்சி தனியோட்டம் ஓடக்காரணம். புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் தமிழரசுக் கட்சியை விட வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாகவும் திறமையாகவும் கையாள வேண்டும் என்று கருதும் மாற்று அணி அவ்வாறு மக்கள் ஆணையைப் பெறவேண்டும்.வெளிவிவகாரம் எனப்படுவது இலட்சியவாதமல்ல. கற்பனாவாதமுமல்ல.அது ஒரு செய்முறை.அரசியல் அதிகாரத்தைப் பெறுவதிலிருந்து அது தொடங்குகிறது. இது இரண்டாவது.
மூன்றாவது கற்றுக்கொண்ட பாடம்- மேற்கண்ட மூன்று ஒருங்கிணைப்பு முயற்சிகளின் போதும் கூட்டுக் கோரிக்கைகளுக்கிடையே ஒருங்கிணைவு இல்லை. ஒரே ஆண்டுக்குள் நிகழ்ந்த இரண்டு ஜெனிவா கூட்டத்தொடர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கிடையே தொடர்ச்சி இருக்கவில்லை, ஒருங்கிணைப்பும் இருக்கவில்லை.அதுபோலவே இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பிலும் கட்சிகளை ஒருங்கிணைப்பது கடினமாயுள்ளது.இது எதைக் காட்டுகிறது என்றால் ஒருங்கிணைப்பு முயற்சிகளை தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற அடிப்படையில் சிவில் அமைப்புகளே முன்னெடுக்க வேண்டும் என்பதுதான்.
சிவில் சமூகங்களால் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைப்பு முயற்சிகளால் மட்டும்தான் எல்லா கட்சிகளையும் குறைந்தபட்சம் விவகாரமைய ஒருங்கிணைப்புக்குள்ளாவது கொண்டுவர முடிகிறது.ஆனால் அதை ஒரு முழு நேர வேலையாக செய்வதற்கு சிவில் சமூகங்களிடம் வளமும் இல்லை, பலமும் இல்லை. அதாவது சிவில் சமூகங்கள் ஒரு பலமான அதிகார மையமாக இல்லை. அவை சொன்னால் தமிழ் கட்சிகள் கேட்க வேண்டும் எனுமளவுக்கு நிலைமைகள் வளரவில்லை.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அரசியலை வழிநடத்தவல்ல மக்கள் இயக்கம் எதுவுமில்லை.தனிய தேர்தல் மைய கட்சிகள் மட்டும்தான் உண்டு என்ற வறுமையின் அடிப்படையிலும் சிந்திக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் மிகத் துலக்கமான முடிவுகளுக்கு நாம் வரலாம். கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட மொத்தம் நான்கு வெளிவிவகார அணுகுமுறைகளும் நமக்கு உணர்த்துவது எதை என்றால் தேர்தல் தோல்விகளும் ஏகபோகம் இழக்கப்பட்டமையும்தான் மேற்கண்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு அடிப்படைக் காரணம்.அதேசமயம் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் முழுமையானவை அல்ல.ஏனெனில் வெளிவிவகாரம் எனப்படுவது கட்சி முரண்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு களம் அல்ல.அது அரசற்ற தேசிய இனங்களைப் பொறுத்தவரை தேச நிர்மாணத்தின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதி.அந்த அடிப்படையில் அது கட்சிகளுக்கிடையிலான போட்டியின் விளைவாகவோ அல்லது தனி ஓட்டங்களாகவோ அல்லது குறுக்கோட்டங்களாகவோ இருக்கக்கூடாது.அதைக் கட்சிகள் மட்டும் செய்யக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள், நிபுணர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் போன்ற எல்லாத் தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு வெளிவிவகாரக் குழு உருவாக்கப்பட வேண்டும்.தாயகம்,புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம், தமிழகம் ஆகிய மூன்று பரப்புகளில் இருந்தும் பொருத்தமான செயற்பாட்டு ஆளுமைகள் அதில் இணைக்கப்பட வேண்டும்.
எனவே தொகுத்துப் பார்த்தால்,தமிழ்மக்களின் வெளிவிவகார அணுகுமுறைகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் துலக்கமான மூன்று ஒருங்கிணைந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.இவற்றிலிருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் வரும் ஆண்டிலாவது தமிழ்மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் உள்ள அனைவரும் ஒரு பொதுவான வெளிவிவகார கட்டமைப்பை குறித்து சிந்தித்து செயற்பட்டால்தான் புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு வெற்றி ஆண்டாக அமையும்.