விடுமுறை வழங்க மறுத்ததால் மேலதிகாரி மீது பொலிஸ் சார்ஜன் துப்பாக்கிச்சூடு, நால்வர் பலி!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பொலிசார் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (25)நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சார்ஜனை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று (25) இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது பொலிஸ் சார்ஜன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்ததுடன் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மேலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.