மூன்று நாட்களில் இரட்டிப்பாக பரவிய ஓமிக்ரோன் - உலகசுகாதார அமைச்சு எச்சரிக்கை!
ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை 89 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், டெல்டா வகையைவிட இது 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரட்டிப்பாகி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான சுகாதார, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘டெல்டா வகை கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகக் காணப்படும் இடங்களில் ஒமிக்ரோன் வகை தொற்றும் அதிக அளவில் பரவி வருகிறது. டெல்டா வகையைவிட சமூகப் பரவல் இடங்களில் இது 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரட்டிப்பாகி வருகிறது. கடந்த 16 ஆம் திகதி நிலவரப்படி 89 நாடுகளுக்கு ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநா் பூனம் கேத்ரபால் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘தகுந்த சுகாதார, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பரவலை நாடுகள் எளிதில் தடுக்க முடியும். தொற்று பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளவா்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொற்று பரவல் வேகம், தடுப்பூசிகளால் உருவாகியுள்ள நோய் எதிா்ப்புத் திறன், கொரோனா தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிா்ப்புத் திறன், புதிய வகை தொற்றின் வீரியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒமிக்ரோன் தொற்று எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கணிக்க முடியும்.
தற்போது கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், டெல்டா வகை தொற்றைவிட ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவும் எனத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் ஒமிக்ரோன் வகை தொற்று பாதிப்பு ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
அதேவேளையில், ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. அவா்களுக்கான சிகிச்சை குறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. ஏற்கெனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் ஒமிக்ரோன் வகை தொற்றுக்கு எதிராகக் குறைந்த செயல் திறனையே கொண்டிருக்கும் என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடா்பாக விரிவான ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒமிக்ரோன் வகை தொற்று பரவலை நாடுகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே, அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளை அதிகரிப்பதோடு, மருத்துவப் பணியாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவ ஆக்சிஜன், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசியும் முன்னெச்சரிக்கையும் : ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும். டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்பட்டன. எனவே, கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துதல் அவசியம். அதேவேளையில், தடுப்பூசி மட்டுமே கொரோனா தொற்று பரவலைத் தடுத்து நிறுத்தாது.
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, வீட்டில் ஜன்னல்களைத் திறந்துவைப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை உச்சத்தை எட்டக்கூடும் என்று தேசிய கொரோனா பரவல் கண்காணிப்பு உதவிக் குழுத் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் குழுவின் தலைவா் வித்யாசாகா் கூறியதாவது: இந்தியாவில் ஒமைக்ரான் தீநுண்மியால் கரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது அலை உச்சத்தை எட்டக்கூடும். எனினும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதன் மூலம் அதிக அளவில் நோய் எதிா்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடுகையில் மூன்றாவது அலையின் பாதிப்பு மிதமாகத்தான் இருக்கும். தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.
இந்தியாவில் ஒமிக்ரோன் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 126 ஆக அதிகரித்தது.
இதுதொடா்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அளித்த புள்ளிவிவரங்களின்படி, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 43 போ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனைத் தொடா்ந்து, தில்லி (22), ராஜஸ்தான் (17), கா்நாடகம் (14), தெலங்கானா (8), குஜராத் (7), கேரளம் (11), ஆந்திரம் (1), சண்டீகா் (1), தமிழ்நாடு (1), மேற்கு வங்கத்தில் (1) ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.