ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பில் சுகாதார மையம் வெளியிட்ட அறிவிப்பு!
உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.
இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 4 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒமைக்ரான் வைரஸால் ஆபத்திலுள்ள நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.
அதன்படி, ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்தடைந்த 15 பேர், நாட்டின் தலைநகரில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது.
இவர்களுடன் அறிகுறிகள் உள்ள மற்றவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் தொற்று சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், புதிய விதிமுறையின்படி, ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனைகள் கட்டாயம் எடுக்கப்படுகிறது. அதன் முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், பிற நாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் தோராயமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 375 பேர் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.