Breaking News

ஒரு மணித்தியால மின் வெட்டு - மின்சார சபை அறிவிப்பு!



நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டிற்கு வரும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படக்கூடும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தடைப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முழுவதுமாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.

எவ்வாறாயினும், சுமார் 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக நேற்றிரவு வரை நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும், நேற்று நள்ளிரவுக்குள் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அனைத்து துணை மின்நிலையங்களும் தற்போது மின் விநியோகத்தில் இருந்தாலும், நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்னும் செயல்படாமல் உள்ளது.

இன்று (04) காலை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின் அமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் அமைப்புடன் சேர்க்க இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என மின்சார சபை தெரிவித்துள்ளது..

இதற்கிடையே நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் விநியோகமும் தடைபட்டது.

எவ்வாறாயினும், நேற்று நள்ளிரவுக்குள் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.