ஜேம்ஸ் வெப்: பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம்!
பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எனப்படும் அந்தத் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட்டின் முனையில் பொருத்தி மூடுவதற்கு முன்பு விஞ்ஞானிகள் இறுதிச் சோதனைகளை முடித்தனர்.
பிரெஞ்சு கயானாவில் உள்ள கோவ்ரு விண்வெளி நிலையத்திலிருந்து வரும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 09:20 மணிக்கு (12:20 GMT) ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
ஜேம்ஸ் வெப்பை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசு என்று கூறுலாம். இதைக் கட்டமைப்பதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்.
இந்தப் புதிய தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தை அதன் முன்னோடிகளை விட இன்னும் ஆழ்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் அதன் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறார்கள். அங்கு உயிர்கள் வாழ்ந்த, வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்படலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.
ஜேம்ஸ் வெப் திட்டத்தை முன்னின்று நடத்துவது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா. அதனுடன் இணைந்து ஐரோப்பிய விண்வெளி அமைப்பான ஈ.எஸ்.ஏ செயல்படுகிறது. ராக்கெட்டில் தொலைநோக்கி பொருத்தப்பட்டதைக் காட்டும் புகைப்படங்களை இந்த நிறுவனங்கள் சனிக்கிழமையன்று வெளியிட்டன.
வளிமண்டலத்துக்குள் நுழைந்து செல்லும்போது தொலைநோக்கியை எரிந்துவிடாமல் பாதுகாக்கும் ராட்சத அமைப்பு லேசர்களின் உதவியுடன் பொருத்தப்பட்டது.
வெப் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் தங்கக் கண்ணாடிகளை பூமியில் நாம் கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு இதுவே. 30 வருடங்களாக வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இந்த விண்வெளித் தொலைநோக்கியை இனி விண்ணில்தான் பார்க்க முடியும்.
ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்டு, தொலைநோக்கியை விடுவிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்ல சுமார் 30 நிமிடங்கள் ஆகும். இதன் பிறகான சாகசப் பயணத்தைக் காட்டுவதற்காக ராக்கெட்டில் வீடியோ கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது.
தொலைநோக்கியில் இருந்து தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் உபகரணங்களுக்கு தரவுகளைக் கடத்தும் தகவல்தொடர்பு கேபிளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஏவுதலை சில நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தனர். இது சரி செய்யப்பட்ட பிறகு, தொலைநோக்கியின் இயங்கு தன்மை சோதிக்கப்பட்டது.
"தொலைநோக்கியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக் குழு கடைசித் தருணம் வரை தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்" என்று கூறினார் நாசாவின் அறிவியல் இயக்குநர் தாமஸ் ஸுர்புக்கென்.
"நாங்கள் இந்தத் தொலைநோக்கியில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஏற்கனவே இது அபாயங்களைக் கொண்டது. அதனால் எல்லாம் முறையாகச் செயல்படுவதை நாங்கள் முழுமையாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம்."
பிரெஞ்ச் கயானாவில் பணிகளை நிர்வகிக்கும் பிரெஞ்சு நிறுவனமான Arianespace, வரும் செவ்வாயன்று ஒரு ஏவுதல் தொடர்பான தயார்நிலை மதிப்பாய்வை நடத்தும். எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவுக்கு வந்தால், முனையில் தொலைநோக்கி பொருத்தப்பட்ட ஏரியன் ராக்கெட், ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ராக்கெட் வெள்ளிக்கிழமை தரையிலிருந்து புறப்பட அரை மணி நேர கால சாளர வரம்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
மோசமான வானிலை அல்லது சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் ஏதேனும் தெரியவந்தால், நிர்ணயிக்கப்பட்ட நாளில் ராக்கெட்டை செலுத்த முடியாது. அதன் பிறகு, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உந்து எரிபொருள்களை தயாரிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படும். அதனால் டிசம்பர் 25 அல்லது 26 ஆம் தேதிகளில் ஏவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
"ராக்கெட் இருக்கும் இடத்திலேயே ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை நாங்கள் தயாரிக்கிறோம். இது ஏரியன் ராக்கெட்டுக்கு மூன்றுமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும் அளவுக்கு உற்பத்தித்திறன் கொண்டது" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி போக்குவரத்து இயக்குநர் டேனியல் நியூயன்ஷ்வாண்டர் கூறினார்.
ஏரியன் ராக்கெட்டில் இந்தப் பயணத்துக்காக பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, புவி வட்டப் பாதைக்கு முன்னேறும்போது அழுத்தம் குறைவதை உறுதி செய்வதற்காக, ராக்கெட்டின் கூம்பு முனையின் பக்கங்களில் சிறப்புத் துளைகள் போடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு அடுக்கு அகற்றப்படும்போது, தொலைநோக்கியை சேதப்படுத்தக்கூடிய அளவு புறச்சூழலில் மாற்றம் இல்லை என்பதை இது உறுதி செய்யும்.
பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கண்காணிப்புப் புள்ளிக்கு செல்லும் பாதையில் வெப் விண்வெளித் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட் வீசியெறியும்.
அதன் பிறகான பயணம் ஒரு மாதம் நீடிக்கும். அந்த நேரத்தில் வெப் தொலைநோக்கி அதன் 6.5 மீட்டர் விட்டம் கொண்ட முதன்மை கண்ணாடி மற்றும் சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் டென்னிஸ் ஆடுகளம் அளவிலான கேடயத்தை விரித்துக் கொள்ளும்.
பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் பிக் பேங் என அழைக்கப்படும் பெருவெடிப்புக்கு பிறகு உருவான தொடக்க காலப் பொருட்களைப் படம்பிடிப்பதே வெப் தொலைநோக்கியின் குறிக்கோள்.
கருதுகோள்களின்படி, இவை முதல் விண்மீன் திரள்களில் இடம்பெற்ற நட்சத்திரங்களாகும்.
எக்ஸோப்ளானெட்ஸ் என்று அழைக்கப்படும் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களையும் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்ய இருக்கிறது. உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான வாயுக்கள் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
"பொதுமக்களும், வானியல் ஆய்வாளர்கள் தங்களுக்குள்ளேயும் கேட்டுக் கொண்டிருக்கும் மிக அடிப்படையான, 'நாம் தனியாகத்தான் இருக்கிறோமா? பூமி தனித்தன்மை கொண்டதா?, உயிர்கள் வாழத்தக்க பிற கோள்கள் உள்ளனவா?' என்பன போன்ற ஒரே மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு வாய்ப்பைப் பெறும்" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வெப் தொலைநோக்கித் திட்ட விஞ்ஞானி அன்டோனெல்லா நோட்டா கூறினார்.
மூலம் - BBC