கொரோனாவுக்கு எதிரான மாத்திரை இலங்கையிலும் பயன்பாட்டுக்கு வருமா?
கொரோனாவுக்கு எதிரான மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற மாத்திரையை, இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஒளடத உற்பத்தி மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கடிதம் ஒன்றினூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
வாய் வழியாக வழங்கப்படும் இந்தத் தடுப்பு மாத்திரை, கொரோனா வைரஸ் தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் உயிரிழக்கும் அபாயத்தைக் சுமார் 50 சதவீதம் தடுக்கும் என மெர்க் ஒளடத நிறுவனம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்த மருந்து பல நாடுகளால் பரிந்துரைக்கப்பட்டு, முன்பதிவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையிலும் அதனை பயன்படுத்த குறித்த மாத்திரையை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மோல்னுபிராவிர் எனப்படும் மாத்திரையை பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை மெர்க் நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.