அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனாவின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.