Breaking News

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!!

 


கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:

எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா்.

அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது.

அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படாத குழுவினரில் 7 சதவீதத்தினா் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவா்களில் 7 போ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனா் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஃபைஸா் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டால்ஸ்டென் கூறுகையில், ‘கொரோனா சிகிச்சைக்காக நாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, மிக அபாரமாகச் செயல்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த மாத்திரை 90 சதவீத செயல்திறனைக் கொண்டதாகவும் கொரோனா மரண அபாயத்திலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்கும்’ என்றாா்.

தங்களது கொரோனா சிகிச்சை மாத்திரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதாக ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.