Breaking News

புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் இல்லை! - சரத் பொன்சேகா

 


தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு பயந்த  முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த,  தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.


குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், அதற்கு தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தல்களை மேற்கொள்வோருக்கும் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து, இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.


லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. இவர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலி உறுப்பினரின் பெயரைக் கேட்டாலோ அல்லது அவர்களைக் கண்டால்கூட ஒழிந்துக் கொள்வாராக இருக்கும்.


ஆனால், இன்று 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துகிறார். அந்தக் கைதிகள் இன்று அனைத்தையும் கைவிட்டுள்ளார்கள். அப்படியாவர்களை மண்டியிட வைத்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார்.


இது எவ்வளவு கீழ்த்தரமான செயற்பாடு. இவ்வாறான செயற்பாடுகளை வீரன் ஒருவன் ஒருபோதும் செய்ய மாட்டான். குடிபோதையில் ஒருவன் துப்பாக்கித் தூக்கினால், அவன் வீரன் கிடையாது.


நானும் சிறைக்கைதியாக இருந்துள்ளேன். அவர்கள் அனுபவிக்கும் துன்பம் எனக்கும் தெரியும். இந்த நிலையில், நான் கைதிகளிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இவ்வாறான சண்டியர்கள் இனிமேல் சிறைச்சாலைக்குள் நுழைந்து அச்சுறுத்தினால், அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பியுங்கள்.


அரசாங்கம் லொஹான் ரத்வத்தவை, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து மட்டும்தான் நீக்கியுள்ளதே தவிர, அவருக்கு ஏனைய அமைச்சுப் பதவிகள் அப்படியே தான் உள்ளன.


இவருக்கு எதிராக இன்னும் பல முறைப்பாடுகளும் உள்ளன. நாடாளுமன்றிலும் நான் இதுதொடர்பாக ஏற்கனவே கூறியுள்ளேன்.


ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.