Breaking News

ரவிராஜ் படுகொலை வழக்கின் சகல பிரதிவாதிகளும் விடுதலை


பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் பிரதிவாதிகள் அனைவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


குறித்த வழக்கின் விசாரணையை நடத்திய ஜூரிகள் சபையின் ஏகமனதான தீர்மானம், பிரதிவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதால், அனைவரையும் விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தீர்ப்பளித்தார். நேற்று அதிகாலை 12:25 அளவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நீதிமன்ற வரலாற்றில் ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற நீண்ட விசாரணையின் பின்னர் நள்ளிரவில் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்பாக இது கருதப்படுகிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், அவரது மெய்ப்பாதுகாவலர் பொலிஸ் கொன்ஸ்டபிள் லக்‌ஷ்மன் லொக்குவெல்ல ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட ஐவரையே நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடற்படை வீரர்கள் மூவர் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக எதிராக குற்றப்புலனாய்வு பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு பிரதிவாதியான பழனிச்சாமி சுரேஷ் காணாமற்போயிருந்த நிலையில் உயிரிழந்துவிட்டார் என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தக் கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 21 நாட்களாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் நேரடி கண்காணிப்பின் கீழ் பட்டதாரிகளை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட சிங்களம் பேசும் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்ெகாள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கின் இரு தரப்பு சட்டத்தரணிகளினதும் இறுதித் தொகுப்புரை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து தீர்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை வழக்கின் தொகுப்புரைகள் இருதரப்பு சட்டத்தரணிகளாலும் வழங்கப்பட்டது. அதனையடுத்து இரவு பத்து மணியளவில் தனது விளக்கவுரையை முடித்துக்ெகாண்ட நீதிபதி, பிரதிவாதிகள் நிரபராதிகளா அல்லது குற்றவாளிகளா என ஆராய்வதற்கான நேரத்தை ஜூரிகள் சபைக்கு வழங்கியிருந்தார். இரவு 12 மணியளவில் நீதிமன்றில் தோன்றி ஜூரிகள் தமது முடிவை ஏகமனதாக வழங்குவதாக நீதிபதிக்குத் தெரிவித்தனர். 

இதன் பின்னர் அவர்களின் தீர்மானத்திற்கு அமைவாக நீதிபதி தமது தீர்ப்பை நேற்று அதிகாலை 12.20 அளவில் தீர்ப்பினை வழங்கினார். கடந்த நவம்பர் 22ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் 21 நாட்களாக விசாரணை நடைபெற்றதுடன், பிரதான சாட்சியாளராக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பிரிதிவிராஜ் மனம்பேரி அழைக்கப்பட்டிருந்தார். அவர் அரச தரப்பு சாட்சியாக மாறியதுடன் தொடர்ந்து ஐந்து நாட்களாக சாட்சியமளித்தார். நடராஜா ரவிராஜின் மனைவி, தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட 24 பேரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் நடவடிக்ifக எடுத்திருந்தது.